Published : 15 Mar 2021 06:12 PM
Last Updated : 15 Mar 2021 06:12 PM
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
நாட்டில் ஜிஎஸ்டி வரி 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஏறக்குறைய 12 மத்திய, மாநில வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த வரி கொண்டுவரப்பட்டது. ஆனால், ஜிஎஸ்டி வரிக்குள், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகிய 5 பொருட்கள் மட்டும் கொண்டுவரப்படவில்லை.
மத்திய அரசு, மாநில அரசுகளின் பிரதான வருவாய்க்கு மூலாதாரமாக இருப்பதால், இந்த 5 பொருட்களையும் ஜிஎஸ்டி வரி முறைக்குள் கொண்டுவரவில்லை.
சர்வதேச அளவில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தபோதிலும்கூட மத்திய அரசு உற்பத்தி வரியைத்தான் உயர்த்திக்கொண்டது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. இதனால், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.
பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவரப்படுமா என்று மக்களவையில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறுகையில், ''இப்போதுள்ள நிலையில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், இயற்கை எரிவாயு, சமையல் சிலிண்டர் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவரும் திட்டம் ஏதும் இல்லை.
ஜிஎஸ்டி சட்டப்படி, ஜிஎஸ்டி கவுன்சில்தான் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி முறைக்குள் எப்போது கொண்டுவரலாம் என்ற தேதியைப் பரிந்துரைக்க முடியும். ஆனால், இப்போதுவரை ஜிஎஸ்டி கவுன்சில், பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவரும் தேதி குறித்து ஏதும் பரிந்துரை செய்யவில்லை" எனத் தெரிவித்தார்.
மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில், "கடந்த ஆண்டில் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.19.98 இருந்தது. ஆனால், தற்போது லிட்டருக்கு ரூ.32.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல டீசல் மீதான உற்பத்தி வரி கடந்த ஆண்டில் ரூ.15.83 ஆக இருந்தது. தற்போது லிட்டருக்கு ரூ.31.80 ஆக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT