Published : 15 Mar 2021 04:47 PM
Last Updated : 15 Mar 2021 04:47 PM
திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட காயம் ஒரு விபத்துதான். அதை அரசியலாக்காதீர்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஆனால், மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட காயத்தைத் தேர்தல் ஆணையம் நிராகரிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார், இதற்கான வேட்புமனுவைக் கடந்த 10-ம் தேதி தாக்கல் செய்தார்.
நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி கடந்த 10-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, காலிலும், கழுத்திலும் காயம் ஏற்பட்டதாகக் கூறி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மம்தா பானர்ஜியை யாரும் தாக்கவில்லை, அவர் நாடகமாடுகிறார் என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனுவும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது தொடர்பாக முழு விசாரணை நடத்தி, அறிக்கையைத் தேர்தல் ஆணையத்திடம் அளித்தனர்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் மம்தா பானர்ஜிக்குப் பாதுகாப்பு வழங்கிய இசட் பிரிவு இயக்குநரை சஸ்பெண்ட் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
மம்தா பானர்ஜிக்கு நடந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் விமானத்தில் செல்லும்போது நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், "மம்தா பானர்ஜிக்கு நடந்த சம்பவம் துரதிர்ஷ்டமானது. அது விபத்துதான். அதை அரசியலாக்காதீர்கள். தேர்தலை யாரும் சிதைத்துவிடக் கூடாது. நம்முடைய ஜனநாயக பாரம்பரியத்தைத் தேர்தல்தான் புனிதப்படுத்துகிறது.
மம்தா பானர்ஜிக்கு நடந்த சம்பவம் விபத்துதான் என ஒவ்வொருவரும் சொல்கின்றனர். ஆதலால், அரசியலாக்காமல் மக்கள் மன்றத்துக்குச் செல்வோம். அவர்கள் முடிவு எடுக்கட்டும். மக்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதை வரவேற்கிறோம். இதுபோன்ற சர்ச்சைக்குரிய சம்பவங்கள் மூலம் தேர்தல் சூழலைச் சிதைப்பது சரியல்ல. இதை மேலும் அரசியலாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
ஆனால், மேற்கு வங்கத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்து போட்டியிடுகின்றன. ஆனால், மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட காயம் குறித்து பாஜக தெரிவித்து வரும் கருத்தை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களிடம் இன்று கூறுகையில், "முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக நடந்த சதி குறித்த விஷயங்களைத் தேர்தல் ஆணையம் நிராகரிக்கவில்லை. அவருக்கு ஏற்பட்ட காயத்தையும் மறுக்கவில்லை. ஆதலால், பாஜக தங்கள் அரசின் கீழ் செயல்படும் தேர்தல் ஆணையம் கூறுவதை நம்ப வேண்டும். மோடியும், அமித் ஷாவும் ஒவ்வொன்றிலும் ஏதாவது பிம்பத்தை உருவாக்குகிறார்கள்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT