Last Updated : 15 Mar, 2021 02:59 PM

1  

Published : 15 Mar 2021 02:59 PM
Last Updated : 15 Mar 2021 02:59 PM

கேரள எட்டுமனூர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பாதிப்பு?: சீட் வழங்காத விரக்தியில் மொட்டையடித்துக்கொண்ட லத்திகா சுபாஷ் சுயேட்சையாக போட்டியிட முடிவு

காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் அமர்ந்து தலையை மொட்டையடித்துக் கொண்ட லத்திகா சுபாஷ் : படம் ஏஎன்ஐ

திருவனந்தபுரம்

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எட்டுமனூர் தொகுதியில் சீட் வழங்காத விரக்தியில் காங்கிரஸ் அலுவலகம் முன் தலையை மொட்டையடித்துக் கொண்ட மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவர் லத்திகா சுபாஷ் சுயேட்சையாகப் போட்டியிடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸிலிருந்து விலகி, லத்திகா சுபாஷ் சுயேட்சையாக எட்டுமனூர் தொகுதியில் போட்டியிட்டால் நிச்சயமாகக் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும். ஆனால், எட்டுமனூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படாமல் கூட்டணிக் கட்சியான, கேரள காங்கிரஸ் (ஜோஸப்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சி சார்பில் பிரின்ஸ் லூகோஸ் போட்டியிடுகிறார்.

கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் கட்சி 91 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் முதல்கட்டமாக 86 வேட்பாளர்களைக் காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது. இதில் 10 பெண் வேட்பாளர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர்.

இதில் கோட்டயம் மாவட்டம் எட்டுமனூர் தொகுதியில் மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவர் லத்திகா சுபாஷுக்கு சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு சீட் மறுக்கப்பட்டதால், நேற்று காங்கிரஸ் மாநிலத் தலைமை அலுவலகத்தின் முன் அமர்ந்து தலையை மொட்டையடித்துக்கொண்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

கேரளாவில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி குழப்பங்கள் தீவிரமாக இருக்கும் நிலையில் லத்திகா சுபாஷின் செயல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அவமானமாக இருந்தது.

இந்நிலையில், லத்திகா சுபாஷ் இன்று அளித்த பேட்டியில் " நான் தீர்க்கமான முடிவு எடுக்கப் போகிறேன். என் ஆதரவாளர்கள், நலம் விரும்பிகளுடன் ஆலோசித்த பின், என்ன முடிவு என விளக்கமாக அறிவிப்பேன். வேறு எந்தக் கட்சியிலும் சேரமாட்டேன். இப்போது ஏதும் தெரிவிக்க இயலாது" எனத் தெரிவித்தார்.

ஆனால், லத்திகா சுபாஷ் எட்டுமானூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவார் என அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எட்டுமானூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை , கூட்டணிக் கட்சிதான் போட்டியிடுகிறது என்றாலும், லத்திகா சுபாஷ் சுயேட்சையாக போட்டியிட்டால் நிச்சயமாக காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு கடுமையாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இன்று கூறுகையில் " லத்திகா சுபாஷ் குறித்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. எட்டுமானூர் தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதலால், அவருக்கு மீண்டும் தொகுதி ஒதுக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை" எனத் தெரிவித்தார்.

இதனால், கோட்டயம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி சதவீதம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x