Published : 15 Mar 2021 01:04 PM
Last Updated : 15 Mar 2021 01:04 PM
ஒரு குறிப்பிட்ட தொகுதியில் நடக்கும் தேர்தலில் வாக்குகள் நோட்டாவுக்கு (NOTA) அதிகமாக இருந்தால், அந்தத் தொகுதியில் மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும், தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி ஆஜரானார்.
மனுதாரர் தாக்கல் செய்த மனுவில், "ஒரு குறிப்பிட்ட தொகுதியில் நடக்கும் தேர்தலில், வெற்றி பெறும் வேட்பாளர் பெறும் வாக்குகளைவிட, நோட்டாவுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்தால், அந்தத் தொகுதியில் தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும். புதிதாகத் தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் நோட்டாவுக்குக் குறைவான வாக்குகள் பெற்ற அரசியல் கட்சிகள், வேட்பாளர்களைப் புதிதாக நடக்கும் தேர்தலில் போட்டியிடவும் தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும். மக்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட வேட்பாளரைத் தேர்வு செய்யவும், பிடிக்காத வேட்பாளரை நிராகரிக்கவும் அதிகாரம் அளிக்க வேண்டும்.
வேட்பாளர் ஒருவரின் பின்புலம், திறன், செயல்பாடு ஆகியவை மீது மக்களுக்கு மனநிறைவு இல்லாவிட்டால், அவர்கள் நோட்டாவுக்கு வாக்களித்து, புதிய வேட்பாளரைத் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி அமர்வு, மனுதாரரின் வழக்கறிஞரிடம், "நோட்டாவுக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கும் பட்சத்தில் தேர்தல் முடிவுகள் ரத்து செய்யப்படும். இதனால் நாடாளுமன்றத்துக்கோ அல்லது சட்டப்பேரவைக்கோ உறுப்பினர்கள் செல்வது தடைப்படும். மிகப்பெரிய அரசியல் கட்சிகள் முன்நிறுத்தும் வேட்பாளர்கள் மக்களால் நிராகரிக்கப்படும் பட்சத்தில் நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டப்பேரவையிலோ இடம் காலியாக இருக்குமே" எனக் கேட்டார்.
அதற்கு மனுதாரரின் வழக்கறிஞர் மேனகா குருசாமி வாதிடுகையில், "தற்போதுள்ள நிலையில் 99 சதவீத வாக்காளர்கள் அரசியல் கட்சிகள் முன்நிறுத்தும் வேட்பாளர்களை விரும்புவதில்லை. ஒரு சதவீதம் மட்டுமே விருப்பத்துடன் தேர்வாகிறார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த மனுவுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம், தேர்தல் ஆணையம் உரிய பதில் தாக்கல் செய்யக் கோரி நோட்டீஸ் அனுப்பத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT