Published : 15 Mar 2021 08:23 AM
Last Updated : 15 Mar 2021 08:23 AM

விவசாயிகள் ஏழைகளாகின்றனர்; அரசு ஊழியர்கள் பணக்காரர்களாகிக் கொண்டே இருக்கின்றனர்: மேகாலயா ஆளுநர் விமர்சனம்

மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார் மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்.

இது தொடர்பாக அவர் நேற்று பேசியதாவது:

விவசாயிகளை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வேதனைக்கு உள்ளாக்கக் கூடாது. போராடும் விவசாயிகளுக்கு எதிராக பலத்தைப் பிரயோகப்படுத்தக் கூடாது என பிரதமரை நான் வேண்டுகிறேன்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை. எந்த ஒரு தேசத்தில் விவசாயிகளும், ராணுவ வீரர்களும் திருப்தியாக இல்லையோ அந்த நாடு முன்னேற்றப் பாதையில் செல்லாது. ஆகையால் விவசாயிகள், ராணுவ வீரர்களின் மன திருப்தியை எப்போதும் அரசு உறுதி செய்ய வேண்டும்.

நாட்டில் விவசாயிகள் ஏழைகளாகின்றனர், ஆனால் அரசு ஊழியர்களோ தொடர்ந்து பணபலம் பெற்று வருகின்றனர். விவசாயிகள் விதைப்பது விலை குறைவாகவும், நுகர்வது விலை உயர்ந்ததாகவும் இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வு எப்படி நடக்கிறது, நாம் ஏன் ஏழ்மையில் இருக்கிறோம் என்பதை விவசாயிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

விவசாயிகள் நிர்மூலமாக்கப்படுகின்றனர். அவர்களுக்குத் தெரியாமலேயே இது நடக்கின்றது. விவசாயிகள் தங்களின் விலை பொருளை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்ற சட்டம் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், உண்மையில் அப்படியா நிலவரம் இருக்கிறது. வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

விவசாயிகளின் பல கேள்விகளுக்கும் அரசு பதிலளிக்க வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x