Last Updated : 14 Mar, 2021 05:28 PM

18  

Published : 14 Mar 2021 05:28 PM
Last Updated : 14 Mar 2021 05:28 PM

மம்தா பானர்ஜி மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை: திரிணமூல் காங்கிரஸ் புகாரை நிராகரித்தது தேர்தல் ஆணையம்

கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற முதல்வர் மம்தா பானர்ஜி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை யாரும் திட்டமிட்டுத் தாக்கவில்லை, அவருக்கு ஏற்பட்ட காயம் யாரும் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்டதல்ல, பாதுகாப்பு குறைபாடுகளால் ஏற்பட்டதல்ல என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி கடந்த 10-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, மர்மநபர்களால் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, காலிலும், கழுத்திலும் காயம் ஏற்பட்டதாகக் கூறி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மம்தா பானர்ஜியை யாரும் தாக்கவில்லை, அவர் நாடகமாடுகிறார் என்று பாஜக, காங்கிரஸ், மற்றும் இடதுசாரிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

ஆனால், முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திடம் சென்று மனு அளித்தனர்.

இந்நிலையில் மாநில தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது

மாநில தேர்தல் பார்வையாளர்கள் அஜெய் நாயக், விவேக் துபே மற்றும் மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் " மம்தா பானர்ஜி மீது திட்டமிட்டு யாரும் தாக்குதல் நடத்தவில்லை. மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட காயம் பாதுகாப்புக் குறைபாடுகளில் ஏற்பட்டதுதான். தாக்குதல் நடத்தியதன் மூலம் காயம் ஏற்படவில்லை.

மம்தா பானர்ஜி நட்சத்திர பேச்சாளராக இருந்தபோதிலும், அவர் கவச வாகனத்தையோ அல்லது கவச உடையையோ அணியவில்லை. துப்பாக்கி ஏந்திய வீரர்களையும் உடன் வைக்கவில்லை. இவை அனைத்தும் மம்தா பானர்ஜிக்கு பாதுகாப்பு அளித்தவர்கள் கவனக்குறைவாகச் செயல்பட்டதால் வந்ததுதான்.

மம்தா பானர்ஜி பயன்படுத்தியதும் சாதாரண வாகனம்தான். ஆனால், மம்தா பானர்ஜிக்கு பாதுகாப்பு அளித்த தலைமை பாதுகாப்பு அதிகாரி கவச வாகனத்தில் வந்திருந்தார். மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் எந்த வீடியோபதிவாளரும், புகைப்படக் கலைஞரும் இல்லை. அவர்களை அங்கு அனுமதிக்கவும் இல்லை" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதலால், மம்தா பானர்ஜி மீது யாரும் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தவில்லை என்று தேர்தல் ஆணையம் முடிவுக்கு வந்து , திரிணாமூல் காங்கிரஸ் கட்சி புகாரை நிராகரித்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் பார்வையாளர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் விரைவில் சில உத்தரவுகளைத் தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x