Published : 14 Mar 2021 04:20 PM
Last Updated : 14 Mar 2021 04:20 PM
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டை மீறிச் சென்று வருகிறது, மற்றொரு லாக்டவுன் வேண்டாம் என்றால், மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி 22-ம் தேதிக்குப்பின் கர்நாடக மாநிலத்தில் ஒரே நாளில் கடந்த 24 மணிநேரத்தில் 922 பேர் புதிதாக கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 600க்கும் மேற்பட்டோர் பெங்களூரு நகர்ப்புறத்தில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
கரோனா வைரஸ் பரவல் மாநிலத்தில் கட்டுப்பாட்டை மாறிச் செல்லும் சூழல் இருப்பதையடுத்து, முதல்வர் பிஹெச் எடியூரப்பா, மாநில தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், உயர் அதிகாரிகள், மருத்துவக் குழுவினர் ஆகியோருடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
முதல்வர் எடியூரப்பா நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் நிலை இருக்கிறது. நாங்கள் மக்களிடம் இருந்து ஒத்துழைப்பை இருகரம் கூப்பி எதிர்பார்க்கிறேன். மக்கள் ஒத்துழைத்தால், நிச்சயம் லாக்டவுன் அமல்படுத்தாமல், கரோனாவைக் கட்டுப்படுத்தலாம். மீண்டும் ஒரு லாக்டவுனை மக்கள் விரும்பமாட்டார்கள் என்று நம்புகிறேன்.
கடந்த ஒரு மாதமாக கரோனா வைரஸ் பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து உயர் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளேன்.
திருமணம், விழாக்கள், துக்க நிகழ்வுகள் போன்றவற்றில் குறிப்பிட்ட அளவில்தான் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
நான் மக்களிடம் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். மாநிலத்தில் மீண்டும் ஒரு லாக்டவுன் வேண்டாம் என்று மக்கள் நினைத்தால், முகக்கவசம் அணிந்து, சமூக விலகலைக் கடைப்பிடித்து அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தாருங்கள். மகாராஷ்டிராவில் படிப்படியாக இப்படித்தான் கரோனா பரவல் அதிகரித்தது. அந்த மாநிலத்திலிருந்து வருவோரைத் தீவிரமாகப் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் லாக்டவுன் அமல்படுத்த தற்போது எந்தத்திட்டம் இல்லை. ஆனால் மக்கள் ஒத்துழைப்பை பொறுத்துத்தான் முடிவு எடுக்கப்படும். லாக் டவுன் கொண்டுவர நான் அனுமதிக்கமாட்டேன், மக்கள் ஒத்துழைப்பு தருவார்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது.
அண்டை மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். நாளை கூட்டத்துக்குப்பின் கட்டுப்பாடுகள் குறித்த விவரம் தெரியவரும்
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT