Last Updated : 14 Mar, 2021 03:32 PM

 

Published : 14 Mar 2021 03:32 PM
Last Updated : 14 Mar 2021 03:32 PM

மே.வங்கத் தேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு 3-வது முறையாக ஒத்திவைப்பு

சர்க்கர நாற்காலியில் அமர்ந்தவாறு மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் இன்று பேரணியில் பங்கேற்ற காட்சி : படம் ஏஎன்ஐ

கொல்கத்தா


மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு 3-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எந்தவிதமான காரணமும் இன்றி, திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டது.

மே.வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. 294 தொகுதிகளில் 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அறிவித்துவிட்டார்.

ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் இந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி 3-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கப் போராடி வருகிறது, அதேநேரத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கவும் திட்டங்களை வகுத்துச் செயல்பட்டு வருகிறது.

நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, கடந்த 10-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். மம்தாவை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி கடந்த 12-ம் தேதி தாக்கல் செய்தார்.

முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 27-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இன்னும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முதலில் கடந்த 9ம் தேதி வெளியிடப்படுவதாக இருந்து. அதன்பின் திடீரென தேதி மாற்றப்பட்டு 11ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நந்திகிராம் தொகுதியில் பிரச்சாரத்துக்கு மம்தா பானர்ஜி சென்றிருந்தபோது, அவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் 11ம் தேதி வெளியிடுவதாகத் தேர்தல் அறிக்கை 14-ம் தேதி(இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

கொல்கத்தாவில் உள்ள மம்தா பானர்ஜி இல்லத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், எந்தவிதமான காரணமும் இன்றி திடீரென மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில் " தேர்தல் அறிக்கை வெளியிடுவது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எப்போது வெளியிடப்படும் என்பது விரைவில் கூறுவோம்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x