Published : 14 Mar 2021 02:16 PM
Last Updated : 14 Mar 2021 02:16 PM
தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக மும்பை போலீஸ் அதிகாரி சச்சின் வேஸிடம் 12 மணிநேரம் விசாரணை நடத்தியபின் தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று இரவு கைதுசெய்தனர்.
கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே மர்ம கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதனுள் 20-க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் அந்தக் காரின் உரிமையாளரும் தானேவைச் சேர்ந்தவருமான மன்சூக் ஹிரன் மர்மமான முறையில் இறந்தார்.
இந்த வழக்கை மகாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரித்து வந்த நிலையில், அதன்பின் வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஹிரன் மனைவியிடம் தீவிரவாத தடுப்பு போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது, கடந்த நவம்பர் மாதம் மும்பை போலீஸ் அதிகாரி சச்சின் வேஸிடம் தனது கணவர் மன்சூக் ஹிரன் எஸ்யுவி காரை ஒப்படைத்தார் என ஹிரன் மனைவி தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தனது கணவர் ஹிரன் மர்ம சாவில், போலீஸ் அதிகாரி சச்சின் வேஸுக்கு தொடர்பு இருக்கலாம் என ஹிரன் மனைவி சந்தேகப்பட்டார். அதன்பின் வழக்கு என்ஐஏ பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்துதான் மும்பை போலீஸ் அதிகாரி சச்சின் வேஸை என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தனர். ஆனால், என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தவுடன் போலீஸ் அதிகாரி சச்சின் வேஸ், முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
ஆனால் மனு மீதான விசாரனையின் போது, அரசு வழக்கறிஞர் விவேக் கது, வாதிடுகையில், " இந்த விசாரணை முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் சச்சின் வேஸுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. இவர் மீது கொலை வழக்கு, ஆதாரங்களை அழித்தல், சதி ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். இதையடுத்து முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து, போலீஸ் அதிகாரி சச்சின் வேஸை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நேற்று விசாரணைக்கு அழைத்திருந்தனர். தெற்கு மும்பையில் உள்ள கம்பாலா ஹில்ஸ் பகுதியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்துக்கு நேற்று காலை 11.30 மணிக்கு சச்சின் வேஸ் விசாரணைக்கு ஆஜராகினார். அவரிடம் 12 மணிநேரம் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி, இரவு 11.50 மணிக்குக் கைது செய்தனர்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஜெலட்டின் குச்சி வைக்கப்பட்ட சம்பவத்தில் போலீஸ் அதிகாரி சச்சின் வேஸுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது விசாரணையில் உறுதியானது என்பதால் கைது செய்யப்பட்டார் எனத் தேசிய புலனாய்வு அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT