Published : 13 Mar 2021 04:33 PM
Last Updated : 13 Mar 2021 04:33 PM

இப்படியும் கேரளாவில் இருந்தது: ஒரு தொகுதிக்கு இரு எம்எல்ஏக்கள்! 

பிரதிநிதித்துவப்படம்

ஒரு தொகுதிக்கு ஒரு எம்எல்ஏதான் இருக்க முடியும். அது எப்படி இரு எம்எல்ஏக்கள் இருக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா. இந்தியாவில் இந்த முறையும் இருந்துள்ளது என்றால் நம்பமுடிகிறதா?

மதராஸ் மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டு கேரள மாநிலம் உதயமானபின் 1957-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் நடந்த முதல் சட்டப்பேரவைத் தேர்தலிலும், 12 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு இரு எம்எல்ஏக்கள் இருந்தனர்.

1960-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டும் ஒரு தொகுதிக்கு இரு எம்எல்ஏக்கள் முறை இருந்துள்ளது. ஒரு தொகுதிக்கு இரு எம்எல்ஏக்கள் இருக்கும் முறையில் ஒரு எம்எல்ஏ பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினராகவும், மற்றொரு எம்எல்ஏ பொதுப்பிரிவிலிருந்தும் தேர்வு செய்யப்படுவார்கள்.

இஎம்எஸ் நம்பூதரி பாட்

1957-ம் ஆண்டு பிப்ரவரி 28 முதல் மார்ச் 11-ம் தேதி வரை கேரளாவில் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அப்போது 126 இடங்கள் இருந்தன. இதில் 11 தொகுதிகள் பட்டியலினத்தவர்களுக்கும், ஒரு தொகுதி பழங்குடியினப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டது.

தொகுதியின் அடிப்படையில் பார்த்தால் 114 தொகுதிகள் இருந்தன, 12 தொகுதிகளில் இரு எம்எல்ஏக்கள் முறை இருந்தன. இந்தத் தேர்தலில் முதல் முறையாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 60 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. உலக வரலாற்றிலேயே முதல் முறையாக, வாக்குச்சீட்டு அடிப்படையில் நடந்த தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது இங்குதான்.

ஒருங்கிணைந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த இஎம்எஸ் நம்பூதரி பாட் முதல்வராக 1957-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி பதவி ஏற்றார். இதில் இஎம்எஸ் நம்பூதரி பாட் நீலிஸ்வரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது நீலிஸ்வரம் தொகுதி இரு எம்எல்ஏக்களைக் கொண்ட தொகுதியாகும். பொதுப்பிரிவினரிலிருந்து ஒரு எம்எல்ஏவும், பழங்குடிஅல்லது பட்டியலினத்தவரிலிருந்து ஒரு எம்எல்ஏவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நீலிஸ்வரம் தொகுதியில் 1,28,918 வாக்குகள் பதிவாகின. இதில் இஎம்எஸ் 39,090 வாக்குகளையும், பட்டியலினத்தைச் சேர்ந்த கல்லாலன் (கம்யூனிஸ்ட் கட்சி) 44,754 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றனர்.

நீலிஸ்வரம் தவிர்த்து, வயநாடு, மஞ்சேரி, சித்தூர், பொன்னானி, வடக்கன்சேரி, சாலக்குடி,தேவிகுளம், குன்னத்தூர், மாவேலிக்கரா, திருக்கடவூர், வர்க்கலா, உளூர் ஆகிய தொகுதிகளுக்கு 2 எம்எல்ஏக்கள் முறை இருந்தது.

1960-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி நடந்த தேர்தலில்தான் முதல் முறையாக ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் 102 தொகுதிகள் ஒருஎம்எல்ஏ கொண்ட தொகுதிகளாகவும், 12 தொகுதிகள் இரு எம்எல்ஏக்களைக் கொண்ட தொகுதிகளாகவும் இருந்தன.

பட்டம் ஏ.தாணுபிள்ளை, பிப்ரவரி 22-ம் தேதி கூட்டணி ஆட்சியில் 11 அமைச்சர்களுடன் முதல்வரானார்.
பட்டியலினத்தவர்கள், பழங்குடியினத்தவருக்கு கூடுதலாக பிரதிநிதித்துவம் அளிப்பதற்காக ஒரு தொகுதிக்கு இரு எம்.பி.க்கள், இரு எம்எல்ஏக்கள் இருக்கும் முறை கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்தத் திட்டம் கடந்த 1961-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, ஒரு தொகுதிக்கு ஒரு எம்எல்ஏ என்ற முறை கொண்டுவரப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x