Published : 13 Mar 2021 03:01 PM
Last Updated : 13 Mar 2021 03:01 PM
நாடு முழுவதும் 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டுவரை கட்சி மாறிய எம்எல்ஏக்களில் 44 சதவீதம் பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். அதாவது, புதிதாக 182 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர் என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.
2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 443 எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கட்சி மாறி, மீண்டும் தேர்தலில் போட்டியிட்டபோது, தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
இதில் நாடு முழுவதும் 405 எம்எல்ஏக்கள் தாங்கள் சார்ந்திருந்த கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைந்துள்ளனர். இதில் 42 சதவீதம் பேர் அதாவது 170 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். பாஜகவிலிருந்து வெறும் 4.4 சதவீதம் பேர் அதாவது 18 எம்எல்ஏக்கள் மட்டுமே விலகியுள்ளனர்.
மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியிலிலிருந்தும், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியிலிருந்தும் தலா 17 எம்எல்ஏக்கள் விலகியுள்ளனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸிலிருந்து 15 பேரும், தேசியவாத காங்கிரஸிலிருந்து 14 எம்எல்ஏக்களும் விலகியுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகவிலிருந்து 3 எம்எல்ஏக்களும், தேமுதிகவிலிருந்து 2 எம்எல்ஏக்களும், திமுகவிலிருந்து ஒரு எம்எல்ஏவும் விலகியுள்ளனர்.
அதேநேரத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய எம்எல்ஏக்களில் 44.9 சதவீதம் பேர் பாஜகவில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகியுள்ளனர். அதாவது பல்வேறு கட்சியிலிருந்து விலகி எம்எல்ஏக்களில் பாஜகவில் 182 எம்எல்ஏக்கள் சேர்ந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் 9.4 சதவீதம் அதாவது, 38 எம்எல்ஏக்கள் சேர்ந்துள்ளனர்.
மத்தியப் பிரதேசம், மணிப்பூர், கோவா, அருணாச்சலப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. அங்கெல்லாம் எம்எல்ஏக்கள் அதிகமாகக் கட்சி மாறியுள்ளனர்.
மொத்தம் 12 மக்களவை எம்.பி.க்கள் கடந்த 4 ஆண்டுகளில் கட்சி மாறியுள்ளனர். 12 எம்.பி.க்களில் 5 எம்.பி.க்கள் பாஜகவிலிருந்து வேறு கட்சிக்குச் சென்றுள்ளனர். மாநிலங்களவை எம்.பி.க்களில் 16 பேர் கட்சி மாறியுள்ளனர். இதில் அதிகபட்சமாக 7 எம்.பி.க்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். பாஜகவிலிருந்து ஒருவர் கூட விலகவில்லை. தெலுங்கு தேசம் கட்சியிலிருந்தும், பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்தும் தலா 2 எம்.பி.க்கள் கட்சி மாறியுள்ளனர்.
மக்களவை எம்.பி.க்களில் 5 பேர் கட்சி மாறி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளனர். பாஜகவில் ஒரு எம்.பி. மட்டுமே சேர்ந்துள்ளார்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பிக்களில் 17 பேரில் 10 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் ஒரு எம்.பி. மட்டுமே சேர்ந்துள்ளார்.
எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கட்சி மாறுவதற்கு பெரும்பாலும் பணம், ஆட்கள் பலம், சட்டத்தின் செயல்பாடு சரியாக இல்லை, நேர்மையற்ற தலைவர்கள் ஆகியோர்தான் காரணம் என்று ஏடிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தப் போக்கு மறுபரிசீலனை செய்யப்படாதவரை, நம்முடைய அரசியல் சூழல், தேர்தல் அரசியல் சூழல் மேலும் மோசமடையும். ஜனநாயகத்தில் இந்த ஓட்டைகளை அடைக்காவிட்டால், ஜனநாயகம் கேலிக்கூத்தாக மாறும். அரசியல் கட்சிகளும், தலைவர்களும் தங்களின் அரசியல் சுயநலத்துக்காகவும், கட்சிகளின் வசதிக்காகவும் இதுபோன்று செய்வதை நிறுத்த வேண்டும். அரசியலில் நம்பிக்கை, துணிச்சல், ஒருமித்த தன்மையைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT