Published : 13 Mar 2021 01:20 PM
Last Updated : 13 Mar 2021 01:20 PM
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் 25 ஆண்டுகளுக்குப் பின் பெண் வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் நீண்ட காலமாக இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 27 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் 25 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை நேற்று வெளியிட்டது.
இந்தத் தேர்தலில் 25 ஆண்டுகளுக்குப் பின் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு தெற்கு தொகுதியில் நூர்பினா ரஷித் எனும் பெண்ணுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு கடைசியாகப் பெண் வேட்பாளராக கமருன்ஷா அன்வருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பின் 25 ஆண்டுகளுக்குப் பின் இப்போது பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார்.
இதுகுறித்து நூர்பினா ரஷித் நிருபர்களிடம் கூறுகையில், "கடந்த 25 ஆண்டுகளுக்குப் பின் பெண் வேட்பாளர் ஒருவருக்குக் கட்சியில் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. சமூகத்துக்குச் சேவை செய்யத் தயாராக இருக்கிறேன். ஜனநாயகத்துக்குக் காவலாகவும் இருப்பேன். மாநிலத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளைச் சட்டப்பேரவையில் எடுத்துக் கூறுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்ட 83 வேட்பாளர்களில் 12 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் ஐயுஎம்எல் கட்சி முதல் முறையாக ஒரு பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விடக் கூடுதலாகப் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT