Published : 11 Mar 2021 05:43 PM
Last Updated : 11 Mar 2021 05:43 PM
கரோனா வைரஸ் விவகாரத்தில் மக்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம் என நிதியோக் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியில் இன்று நிதிஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறுகையில், "மகாராஷ்டிராவில் கரோனா தொற்று அதிகரித்துவருவது மத்திய அரசுக்கு கவலையளிக்கிறது. இது நமக்கு இரண்டு பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. ஒன்று கரோனா வைரஸ் விஷயத்தில் மெத்தனம் கூடாது; இன்னொன்று கரோனா இல்லா இந்தியாவை உருவாக்க முகக்கவசம் சமூக இடைவெளி உள்ளிட்ட நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்" என்றார்.
கரோனா வைரஸ் பரவல், மகாராஷ்டிராவில் புனே, நாக்பூர், தானே, மும்பை, அமராவதி, ஜல்கான், நாசிக், அவுரங்காபாத் நகரங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் 85% மேற்பட்ட கரோனா பாதிப்பு பதிவாகிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார். மேலும், தடுப்பூசி விலையை மாற்றியமைத்துள்ளதாகவும் புதிய விலை மிகவும் குறைவாக இருக்கும் என்று அவர் கூறினார். 11 மார்ச் மதியம் 1 மணி நிலவரப்படி 2,56,90,545 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
புனேவில் லாக்டவுன்:
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரே நாளில் 1800 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் மார்ச் 15ம் தேதி முதல் 21ம் தேதிவரை லாக்டவுன் அறிவிக்கப்பட்ட்டுள்ளது.
அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் அங்காடிகள் மட்டுமே திறந்திருக்கும்.
இது தொடர்பாக மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, "கடந்த 24 மணி நேரத்தில் நாக்பூரில் 1800 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால் வரும் 15ம் தேதி முதல் 21ம் தேதிவரை நாக்பூரில் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் அங்காடிகள் மட்டுமே திறந்திருக்கும்.
கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தால், மாநிலத்தின் இன்னும் பிற பகுதிகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும். இது தொடர்பாக அடுத்த இரண்டு நாட்களில் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT