Published : 11 Mar 2021 08:38 AM
Last Updated : 11 Mar 2021 08:38 AM

நான் ராமர், ஹனுமான் பக்தர் என்று முழங்கிய கேஜ்ரிவால் மூத்த குடிமக்களுக்கு இலவச அயோத்தி புனித யாத்திரை அறிவித்தார்

நான் ராமர், ஹனுமானின் பக்தர். ராம ராஜ்ஜிய கோட்பாடுகளில் 10 கொள்கைகளை டெல்லி மக்களின் நலனுக்காக செயல்படுத்துவேன் என அண்மையில் முழங்கிய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தற்போது மூத்த குடிமக்களுக்கு இலவசமாக அயோத்தி புனித யாத்திரை திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே டெல்லி அரசு சார்பில் முதல்வரின் தீர்த்த யாத்திரை யோஜனா என்ற் பெயரில் மூத்த குடிமக்களுக்கான இலவச புனித யாத்திரை திட்டம் அமலில் இருக்கும் நிலையில், தற்போது ராமர் கோயிலுக்கென தனித் திட்டத்தை அறிவித்துள்ளார்.

அயோத்தியில் இன்னும் 36 மாதங்களில் ராமர் கோயில் கட்டிமுடிக்கப்படும் எனத் தெரிகிறது.

டெல்லி சட்டப்பேரவையில் நேற்று பேசிய கேஜ்ரிவால், "மூத்த குடிமக்களுக்கு மரியாதை செலுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அந்த வகையில் டெல்லியில் உள்ள மூத்த குடிமக்கள் அனைவரையும் அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்ப நான் விரும்புகிறேன்.

மூத்த குடிமக்களின் பயணச் செலவு, தங்குமிடம், உணவுச் செலவு அத்தனையும் டெல்லி அரசால் மேற்கொள்ளப்படும்.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், எங்கள் கல்வி அமைச்சரைப் போல் பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சி. பள்ளிகளை ஆய்வு செய்த கையோடு ஆதித்யநாத் உ.பி. கல்வி நிலையங்களின் தரத்தை உயர்த்த வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக, டெல்லி மாநில அரசு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் பட்ஜெட் தாக்கல் செய்தது. அதில் தேசபக்தி அட்டவணை என்ற ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லி முழுவதும் 500 இடங்களில் தேசிய கொடிக்கம்பங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு தேசபக்தி திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை மக்களுக்கு எடுத்துரைக்கும் திட்டங்களையும் அறிவித்தது.

ஆம் ஆத்மி ஏற்றுக்கொண்ட ராம ராஜ்ஜியத்தின் 10 கொள்கைகள்...

உணவு, கல்வி, மருத்துவ சேவை, மின்சாரம், குடிதண்ணீர், வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, பெண்கள் பாதுகாப்பு, முதியோருக்கு மரியாதை ஆகியனவையே அரவிந்த் கேஜ்ரிவால் ஏற்றுக்கொண்டுள்ள ராம ராஜ்ஜியத்தின் 10 கொள்கைகள்.

இது குறித்துப் பேசிய கேஜ்ரிவல, டெல்லியில் யாரும் வெறும் வயிற்றுடன் தூங்கச் செல்லக்கூடாது. சமூக அந்தஸ்து எதுவாக இருந்தாலும் எல்லாக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும், ஒவ்வொரு தனிநபரும் தரமான மருத்துவ சேவையைப் பெற வேண்டும், டெல்லி அரசு ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு 20000 லிட்டர் குடிதண்ணீரை உறுதி செய்கிறது, மாநிலம் முழுவதும் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குகிறது. வேலைவாய்ப்பைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்கும் பல்வேறு நடவடிக்கைகளை ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டுள்ளது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x