Published : 11 Mar 2021 03:12 AM
Last Updated : 11 Mar 2021 03:12 AM
அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு சமகால உதாரணமாகியிருக்கிறார் பி.சி.சாக்கோ. கேரள காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான சாக்கோவின் பேட்டி நேற்றைய ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியாகியிருந்தது.
அதில் பி.சி.சாக்கோ, கம்யூனிஸ்ட் கட்சியை முரண்பாடுகளின் மூட்டை என்றும், பாஜகவை கேரளாவில் ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது எனவும் சாடினார். கூடவே,கேரளத்தில் காங்கிரஸ் எவ்வளவு ஆழமாக மக்கள் மனதில் ஊடுருவியுள்ளது என்றும் விளக்கினார். இந்நிலையில் நேற்று திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார் சாக்கோ. தனது ராஜினாமா கடிதத்தை கட்சி மேலிடத்தில் கொடுத்தார்.
கேரளத்தில் அமைச்சர், எம்.பி. என பல பொறுப்புகளில் இருந்த சாக்கோவின் திடீர் விலகல் கேரள காங்கிரஸில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 'இந்து தமிழ் திசை' சார்பில் சாக்கோவை தொடர்புகொண்டோம்.
காங்கிரஸை ஆதரித்து பேட்டிகொடுத்திருந்தீர்களே.. ஒரேநாளில் என்ன ஆனது?
நான் நேற்று பேசும்போதே, காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்ததால்தான் கேரள சட்டப்பேரவையில் கடந்த தேர்தலில் பாஜக ஓர்இடம் பெற்றது எனக் குறிப்பிட்டேன்.அகில இந்திய அளவில் தலைவர் இல்லாததால் காங்கிரஸ் தொடர்ந்து பலவீனம் அடைவது துரதிஷ்டவசமானது என சுட்டிக்காட்டியிருந்தேன்.
காங்கிரஸ் கட்சியில் உங்களுக்கு என்னதான் பிரச்சினை?
முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் (ஏ க்ரூப்) ஒரு குழுவும், எதிர்கட்சித் தலைவர் ரமேஷ்சென்னிதலா (ஐ க்ரூப்) தலைமையில் ஒரு குழுவும் இயங்குகிறார்கள். இதற்கு மத்தியில் ஒருவரால் காங்கிரஸின் ஊழியராக இருக்கவே முடியாது. அகில இந்தியத்தலைமை கேரள பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 40 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்தக்குழுவில் நானும் இருக்கிறேன். ஆனாலும் அந்தக்குழுவைக் கூட்டி கருத்து கேட்கவோ, விவாதிக்கவோ இல்லை. தேசியத்தலைமையும் குழு அரசியலை கண்டுகொள்ள வில்லை. கட்சியில்குழு அரசியலுக்கே முக்கியத்துவம் இருப்பதால் என் எதிர்ப்பைக் காட்ட ராஜினாமா செய்தேன்.
ரமேஷ் சென்னிதலா, உம்மன்சாண்டிக்கு இடையில் சிக்கிக் கொண்டு கேரள மாநிலத் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் திணறி வருகிறார்.
இந்தத் தேர்தலில் என்ன நிலைப்பாடு?
மார்க்சிஸ்ட் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இந்த தேர்தல் ஒருயுத்தம். சித்தாந்தங்கள் மோதப்போகின்றன. ஆனால் அதில் கவனம்செலுத்தாமல் எந்தக்குழு அதிகஇடங்களை கைப்பற்றுவது என்பதில் கவனம் செலுத்துகிறார்கள். காங்கிரஸில் எனக்கு தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை. குழு அரசியலில் எனக்கு விருப்பமும் இல்லை. தலைமை இனி இதில் விழிப்படையட்டும். ராஜினாமா செய்தாலும் வேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. தொடந்து மக்கள் பணி செய்வேன். இவ்வாறு சாக்கோ கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT