Published : 10 Mar 2021 06:29 PM
Last Updated : 10 Mar 2021 06:29 PM
அசாம் பாஜக முதல்வர் சர்பானந்த சோனோவாலின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் 5 ஆண்டுகளில் 71% அதிகரித்துள்ளன. புதிதாக அவர் எந்த அசையா சொத்தையும் வாங்காதபோதும் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 47 தொகுதிகளுக்கு முதற்கட்டத் தேர்தல் மார்ச் 27-ம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 39 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடது சாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாஜக கூட்டணியில் அசோம் கன பரிஷத் கட்சி இடம் பெற்றுள்ளது. தற்போது அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவால் தற்போது மஜுலி பழங்குடியினத் தொகுதியில் பாஜக வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார். நேற்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்த நிலையில் பிரமாணப் பத்திரத்தைச் சோனோவால் இன்று தாக்கல் செய்தார். அதில், 2016-ம் ஆண்டு இருந்ததைக் காட்டிலும் 2021-ல் அசையும் மற்றும் அசையா சொத்துகள் 5 ஆண்டுகளில் 71% அதிகரித்துள்ளன.
2016-ல் ரூ.1.85 கோடியாக இருந்த அவரின் சொத்து மதிப்பு தற்போது 2021-ல் ரூ.3.17 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது ரூ.1,32,26,475 உயர்ந்துள்ளது. புதிதாக அவர் எந்த அசையா சொத்தையும் வாங்காதபோதும் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
59 வயதான சோனோவாலின் அசையும் சொத்துகள் 2016-ல் ரூ.70.44 லட்சமாக இருந்த நிலையில், 2021-ல் ரூ.1.14 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கி இருப்புத் தொகையும் ரூ.12,13,320-ல் இருந்து ரூ.38,02,498 ஆக அதிகரித்துள்ளது. எனினும் அவரின் கையிருப்பு 2016-ல் ரூ.94,597 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.39,030 ஆகக் குறைந்துள்ளதாகப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT