Published : 10 Mar 2021 03:49 PM
Last Updated : 10 Mar 2021 03:49 PM
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நேரத்தில் கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ கட்சியில் இருந்து விலகியுள்ளார். நேர்மையான காங்கிரஸ்காரனாக இருப்பது கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில், 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்றும், நேர்மையான காங்கிரஸ்காரனாக இருப்பது கடினம் எனவும் கூறி, அக்கட்சியின் மூத்த தலைவரும் திருச்சூர் முன்னாள் எம்.பி.யுமான பி.சி.சாக்கோ கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் இத்தகவலைத் தெரிவித்த சாக்கோ, ''நான் காங்கிரஸில் இருந்து விலகிவிட்டேன். எனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளேன். பல நாட்களாகவே விலகுவது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்.
நான் கேரளாவில் இருந்து வருகின்றேன். அங்கு காங்கிரஸ் என்ற கட்சியே இல்லை. கட்சிக்குள் இரு பிரிவுகள்தான் உள்ளன. இரண்டு பிரிவுகளையும் ஒன்றிணைக்கும் குழுதான் கேரள காங்கிரஸ் கட்சியாகச் செயல்படுகிறது.
கேரள மக்கள் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை விரும்புகின்றனர். ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் குழுக்களாகப் பிரிந்து கிடக்கின்றனர். கேரளாவில் காங்கிரஸ்காரனாக இருப்பது கடினம். காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் இருந்தால்தான் பிழைக்க முடியும். இங்குள்ள காங்கிரஸ் தலைமையும் அத்தனை உத்வேகம் அளிப்பதாய் இல்லை'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT