Published : 10 Mar 2021 03:26 PM
Last Updated : 10 Mar 2021 03:26 PM
துர்கா தேவிக்கான மந்திரங்களை மம்தா பானர்ஜி தவறாக உச்சரித்ததாகவும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கு வங்கம் வந்து மந்திரங்களைக் கற்பிக்க வேண்டும் என்றும் சுவேந்து அதிகாரி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மார்ச் 27-ம் தேதி முதல்கட்டத் தேர்தலும், ஏப்ரல் 1-ம் தேதி 2-வது கட்டத் தேர்தலும் நடக்கிறது. இரு கட்டங்களிலும் 60 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. இதில் திரிணமூல் காங்கிரஸ் அரசில் கேபினட் அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி பாஜகவில் சேர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
வழக்கமாக பவானிபூரில்தான் மம்தா பானர்ஜி போட்டியிடுவார். ஆனால், சுவேந்து அதிகாரியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் மம்தா பானர்ஜி தொகுதியை இந்த முறை மாற்றியுள்ளார்.
இதற்கிடையே நந்திகிராம் பகுதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி துர்கா தேவிக்கான மந்திரங்களைப் பாடியிருந்தார். இதுகுறித்து பாஜக சார்பில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி இன்று விமர்சித்துள்ளார். அத்துடன் மம்தா பாடிய பதிவு செய்யப்பட்ட பாடலையும் ஒலிபரப்பிக் காண்பித்தார்.
தனது தொகுதியில் தேர்தல் அலுவலகத்தைத் திறந்துவைத்து சுவேந்து அதிகாரி பேசியதாவது:
''நந்திகிராமின் மண்ணின் மைந்தர் நான்தான். வெளியிலிருந்து வந்தவர் மம்தா பானர்ஜி. இதை மக்கள் உணர வேண்டும். அவர் தன்னுடைய ஓட்டைக் கூட இங்கு போட முடியாது. தேர்தலுக்காக மட்டுமே இங்கு வருபவர் மம்தா. ஆனால், நான் அவரைப் போல் இல்லை. பல ஆண்டுகளாக இங்குள்ள மக்களுடன்தான் இருக்கிறேன்.
நிதி நிறுவன ஊழல் திரிணமூல் காங்கிரஸ் அரசாலும் அதன் தலைவர்களாலும் ஏற்பட்டது. பாஜக ஆட்சிக்கு வந்தால் மக்களின் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்.
மம்தா பானர்ஜி 'சண்டிபாத்' எனப்படும் துர்கா தேவிக்கான மந்திரங்களைத் தவறாக உச்சரித்துள்ளார். சரியான மந்திரங்களை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் பாட முடியும். அவர் மேற்கு வங்கம் வந்து, மம்தாவுக்குச் சரியான மந்திரங்களைக் கற்பிக்க வேண்டும். இதற்காக யோகி ஆதித்யநாத் மேற்கு வங்கம் வரவேண்டும் என்று விரும்புகிறேன்''.
இவ்வாறு சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT