Published : 10 Mar 2021 10:53 AM
Last Updated : 10 Mar 2021 10:53 AM
உத்தரகாண்டின் அடுத்த முதல்வர் யார் என்பது தொடர்பாக அம்மாநில எம்எல்ஏக்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். டேராடூனில் கட்சித் தலைமையகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
உத்தரகண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் தலைமை மீது மாநில பாஜக தலைவா்கள் சிலா் அதிருப்தி அடைந்தனா். அடுத்த ஆண்டு அந்த மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை அவரது தலைமையின் கீழ் பாஜக எதிா்கொள்வது சிறப்பாக இருக்காது என அவர்கள் கூறி வந்தனர். இதனை டெல்லி தலைமைக்கு எடுத்துரைத்தன. அதன் பின்னர், ராமன் சிங் தலைமையில் மத்திய குழு உத்தரகாண்டில் ஆய்வு மேற்கொண்டது.
இதனையடுத்து, டெல்லியில் தேசியத் தலைவர் நட்டாவுடனான சந்திப்புக்குப் பின் திரிவேந்திர சிங் ராவத் தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், அடுத்த முதல்வர் யாரென்பது குறித்து இன்று அம்மாநில எம்எல்ஏக்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஹரித்வார் எம்.பி., ரமேஷ் பொக்ரியால், நயினிடால் எம்.பி. அஜய் பட், மாநில சுற்றுலா அமைச்சர் சத்பால் மஹாராஜ், ராஜ்யச்பா எம்.பி. அனில் பலூனி, உயர் கல்வி அமைச்சர் தன்சிங் ராவத் ஆகியோர் முதல்வர் பட்டியலில் இருக்கின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அங்குள்ள 70 தொகுதிகளில், பாஜக 57 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப்பிடித்தது. காங்கிரஸ் 11 இடங்களிலும், இதர கட்சிகள் 2 இடங்களை பெற்றது.
அடுத்த ஆண்டு அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கட்சியை வலுப்படுத்தும் முயற்சியை பாஜக முன்னெடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT