Published : 08 Mar 2021 10:03 PM
Last Updated : 08 Mar 2021 10:03 PM
ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் கடைசி பெஞ்ச் மாணவனாகவிட்டார். அவர் முதல்வராக வேண்டுமென்றால் காங்கிரஸில் இருந்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி கூட்டத்தில் கட்சியின் முக்கியத்துவம் குறித்து ராகுல் பேசினார். அப்போது அவர் ஜோதிராதித்ய சிந்தியாவின் கட்சித்தாவல் குறித்து பேசினார்.
அவர் கூறுகையில், "ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் கடைசி பெஞ்ச் மாணவனாகத்தான் இருக்க முடியும். அவர் முதல்வராக வேண்டுமென்றால் காங்கிரஸில் இருந்திருக்க வேண்டும். இப்போதும் சொல்கிறேன், பாஜகவில் இருக்கும்வரை சிந்தியாவால் முதல்வராக முடியாது.
அவர் முதல்வர் கனவை நனவாக்க நிச்சயமாக இங்கு திரும்புவார். காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து உழைத்தால் நிச்சயம் முதல்வர் பதவி ஒருநாள் தேடிவரும் என்று நான் அவரிடம் சொன்னேன்.
அவர்தான் அதைக் கேட்கவில்லை. வேறு பாதையை தேர்வு செய்துவிட்டார்" என்றார்.
மேலும், இளைஞர் காங்கிரஸார் யாருக்கும் அஞ்சாமல், ஆர்எஸ்எஸ் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
காங்கிரஸின் அடுத்த தலைமுறைத் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த ஆண்டு மார்ச் மாதம் அக்கட்சியிலிருந்து விலகியதோடு பாஜகவிலும் இணைந்தார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளா தாரமும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையும் பயின்றவர் ஜோதிராதித்ய சிந்தியா. ஹார்வர்டு நாட்களிலிருந்தே ராகுலும் அவரும் நண்பர்கள்.
இந்நிலையில், ராகுல் காந்தி தனது நண்பர் பாதை மாறிச் சென்றது குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT