Published : 08 Mar 2021 08:18 PM
Last Updated : 08 Mar 2021 08:18 PM
சில ஆண்டுகளுக்கு முன் நினைத்து பார்க்க முடியாத விஷயங்களை இந்தியா தற்போது சாதிக்கிறது என நரேந்திர மோடி உறுதிப்பட கூறினார்.
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை (அம்ருத் மகோத்சவம்) கொண்டாடும் தேசியக் குழுவின் முதல் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார்.
இந்தக் குழுவில் பிரதமர் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், அதிகாரிகள், ஊடகத்தினர், ஆன்மீக தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற நிபுணர்கள் இதில் பங்கேற்றனர்.
தேசியக் குழுவின் உறுப்பினர்களான முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவி சிங் படேல், முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா, நவீன் பட்நாயக், மல்லிகார்ஜூன கார்கே, மீரா குமார், சுமித்ரா மகாஜன், ஜே.பி.நட்டா மற்றும் மவுலானா வாஹிதுதின் கான் ஆகியோர் இந்த கூட்டத்தில் தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
75-வது சுதந்திர தின ஆண்டை கொண்டாட திட்டமிடுவதற்காக பிரதமருக்கு தேசியக் குழு உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர். இந்த விழாவின் நோக்கத்தை விரிவுபடுத்த அவர்கள் தங்கள் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவித்தனர்.
இந்த விழா தொடர்பாக இன்னும் பல கூட்டங்கள் நடைபெறும் எனவும், அப்போது இன்று பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ‘‘நாடு 75 வது சுதந்திர ஆண்டை, தனது வரலாற்று சிறப்பு, பெருமை ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் பிரம்மாண்டமாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடும்’’ என்றார்.
குழு உறுப்பினர்களிடம் இருந்து வந்த புதிய கருத்துக்கள் மற்றும் பல்வேறு சிந்தனைகளையும் அவர் பாராட்டினார். சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை, அவர் இந்திய மக்களுக்காக அர்ப்பணித்தார்.
சுதந்திர போராட்ட உணர்வு, தியாகிகளுக்கு புகழஞ்சலி, மற்றும் இந்தியாவை உருவாக்குவதற்கான அவர்களின் உறுதிமொழி ஆகியவற்றை உணரும் விழாவாக, சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழா இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்,
நிலையான இந்தியாவின் பெருமை மற்றும் நவீன இந்தியாவின் ஜொலிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த விழா இருக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
இந்த விழா முனிவர்களின் ஆன்மீக ஒளியையும், நமது விஞ்ஞானிகளின் திறமையையும் வலிமையையும் பிரதிபலிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சி, நமது 75 ஆண்டுகள் சாதனையை உலகுக்கு தெரிவிப்பதாகவும் மற்றும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு நமக்கு தீர்வுகளைக் கூறும் கட்டமைப்பையும் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கொண்டாட்டம் இல்லாமல், எந்த உறுதி மொழியும் வெற்றிகரமாக இருக்காது என பிரதமர் கூறினார். உறுதிமொழி கொண்டாட்டமாக மாறும்போது, அந்த உறுதிமொழிகளுடன், கோடிக்கணக்கானவர்களின் சக்தியும் ஒன்று சேர்கிறது.
75வது ஆண்டு சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் 130 கோடி இந்தியர்களின் பங்களிப்புடன் இருக்க வேண்டும். மக்களின் பங்களிப்புதான் இந்த விழாவில் முக்கியம். இந்த பங்கேற்பில் நாட்டு மக்கள் 130 கோடி பேரின் உணர்வுகள், ஆலோசனைகள் மற்றும் கனவுகள் அடங்கியுள்ளன.
75வது ஆண்டு கொண்டாட்டத்துக்கு 5 தூண்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன என பிரதமர் தெரிவித்தார். அவைகள், சுதந்திர போராட்டம், 75-ம் ஆண்டில் கருத்துக்கள், 75ம் ஆண்டில் சாதனைகள், 75ம் ஆண்டில் செயல்பாடுகள், 75ம் ஆண்டில் தீர்மானங்கள் ஆகும்.
இவை அனைத்திலும், 130 கோடி இந்தியர்களின் கருத்துக்கள் மற்றும் உணர்வுகள் அடங்கியிருக்க வேண்டும்.
குறைவாக அறியப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட வேண்டும். அவர்களின் கதைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
தியாகிகளின் தியாகம் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நிறைந்துள்ளது. அவர்களின் கதைகள், நாட்டுக்கு நிலையான ஊக்குவிப்பாக இருக்கும். ஒவ்வொரு பிரிவினரின் பங்களிப்பையும், நாம் முன்னிலைக்கு கொண்டு வர வேண்டும் என அவர் கூறினார்.
பல தலைமுறைகளாக நாட்டிற்காக சிறந்த பணிகளைச் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பு, சிந்தனை மற்றும் கருத்துக்கள் தேசிய முயற்சிகளுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க விழா, சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்றுகிறது. அவர்கள் ஆசைப்பட்ட உயரத்துக்கு நாட்டை முன்னேற்றும் ஒரு முயற்சிதான் இந்த விழா என பிரதமர் கூறினார்.
சில ஆண்டுகளுக்கு முன் நினைத்து பார்க்க முடியாத விஷயங்களை இந்தியா தற்போது சாதிக்கிறது என அவர் உறுதிப்பட கூறினார். இந்தியாவின் வரலாற்று பெருமைக்கு தகுந்தபடி இந்த கொண்டாட்டம் இருக்க வேண்டும் என பிரதமர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT