Published : 08 Mar 2021 04:38 PM
Last Updated : 08 Mar 2021 04:38 PM
கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் மூலம் பெற்ற ரூ.21 லட்சம் கோடி எங்கே சென்றது? தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசி, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. இந்த அமர்வின் முதல் நாளிலேயே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்துப் பேச வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை முழுமையாக ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், மாநிலங்களவை விதி எண் 267-ன் கீழ், பெட்ரோல், டீசல், எல்பிஜி விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும். நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. ஆனால், இதற்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மறுத்துவிட்டார்.
இதுகுறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வு குறித்து மக்களின் கோபத்தையும், இயலாமையையும் வெளிப்படுத்த முயன்றோம். நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினோம். ஆனால், அதற்கு மத்திய அரசு சம்மதிக்கவில்லை. அதைக் கேட்கத் தயாராகவும் இல்லை.
ஆனால், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எங்கள் கோரிக்கையை எழுப்புவோம். சாமானிய மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் எங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கும். விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் பேச முயன்றால், அதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.
சாமானிய மக்களின் பிரச்சினைகளைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேச நேரம் ஒதுக்க வேண்டும். மற்ற கட்சிகளும் காங்கிரஸ் கட்சியுடன்தான் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் எங்களுக்கு இணக்கமாக இருக்கிறார்கள். சாமானிய மக்களின் கவலைகளை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து நாங்கள் எழுப்புவோம்.
மோடி அரசு கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் மூலம் ரூ.21 லட்சம் கோடி ஈட்டியுள்ளது. அந்தப் பணம் எங்கே சென்றது, அந்தப் பணத்தை யாரிடம் கொடுத்தார்கள்?
ஒருபுறம் மத்திய அரசு கோடீஸ்வரர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் வரியைக் குறைக்கிறது. மறுபுறம், பெண்கள், நடுத்தரக் குடும்பத்தினர், சாமானிய மக்கள் ஆகியோர் மீது கூடுதல் சுமையை ஏற்றுகிறது. அவர்களால் அதைத் தாங்க முடியவில்லை. உணவுப் பொருட்கள் மட்டுமின்றி ஒவ்வொரு பொருளின் விலையும் அதிகரித்துவிட்டது.
அரசின் கஜானாவை நிரப்பும் பணியை அரசு ஒருபுறம் செய்கிறது. ஆனால், விலைவாசி உயர்வு மக்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை அரசு பார்க்க மறுக்கிறது. பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்துள்ள வரி, வளர்ந்த நாடுகளில் கூட இல்லை. இந்த வரியைக் குறைக்கக் கோரி சோனியா காந்தி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியும் அரசு வரியைக் குறைக்க மறுக்கிறது''.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT