Published : 08 Mar 2021 10:05 AM
Last Updated : 08 Mar 2021 10:05 AM
இந்தியா கரோனா வைரஸ் ஒழிப்பின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், இத்தருணத்தில் கரோனா தடுப்பூசி திட்டத்தை அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும் எனவும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
அதேபோல், மக்களும் இந்தத் தடுப்பூசிகள் பின்னால் இருக்கும் அறிவியலை உணர்த்து தங்களின் அன்புக்குரியவர்கள் தடுப்பூசி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹர்ஷ்வர்தன் இதனைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பிற நாடுகளைப் போல் இல்லாமல், நமது தேசத்தில் கரோனா தடுப்பூசி விநியோகம் சீராக உள்ளது. ஆரம்பக்கட்ட ஆய்வு முடிவுகளின்படி, உலகின் பிற நாடுகளில் புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகளை ஒப்பிடும்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிகள் மிகக்குறைவான பக்கவிளைவுகளை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு இன்றளவும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் போலியோ தடுப்பூசி திட்டத்தில் இணைந்திருந்தால் இந்த நிலை இருந்திருக்காது.
அதேபோல், மற்ற நாடுகளும் கரோனா தடுப்பூசியை வழங்கும் திட்டத்தை முன்னெடுக்காவிட்டால் கரோனாவை இந்தியாவில் ஒழிக்க முடியாது.
ஆகையால் ஏழை, வளர்ச்சியடையாத நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசி சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகத்துக்கே ஒரு மருந்தகமாகத் திகழ்கிறது. 62 நாடுகளுக்கு 5.52 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்களை வழங்கியிருக்கிறது. உலகமே மருத்துவ நெருக்கடியை சந்தித்திருக்கும் வேளையில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதில் பிரதமர் உறுதியாக இருந்தார்.
கரோனா வைரஸ் ஒழிப்பில் இந்தியா இறுதிக் கட்டத்தில் உள்ளது. இப்போது இதில் நாம் முழு வெற்றி காண மூன்று வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். முதலாவதாக கரோனா தடுப்பூசி திட்டத்தை அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும். இரண்டாவதாக கரோனா தடுப்பூசி பின்னால் உள்ள அறிவியலை நம்ப வேண்டும். மூன்றாவதாக, நாமும் நமக்கு நெருக்கமானவர்களும் கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT