Published : 08 Mar 2021 08:04 AM
Last Updated : 08 Mar 2021 08:04 AM
நடிகர் மிதுன் சக்ரவர்த்தி நேற்று கொல்கத்தாவில் நடந்த பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் தன்னை முறைப்படி அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
ஏற்கெனவே திரிணமூல் எம்.பி.யாக இருந்தவர் என்பதால் மிதுனை சிலர் சுயநலவாதி என்று விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவில் தான் இணைந்தது குறித்து மனம் திறந்த மிதுன் சக்ரவர்த்தி, "என்னை நீங்கள் சுயநலவாதி என்று அழைக்கலாம். ஆனால், அந்த சுயநலத்துக்குப் பின்னால் ஏழை மக்களுடன் துணை நிற்க வேண்டும் என்ற எனது லட்சியம் உள்ளது. நான், ஏழை மக்களின் உரிமைக்காகப் போராடுவேன்.
எனக்கு 18 வயதாக இருந்தபோதே நான் ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற லட்சியம் கொண்டிருந்தேன். அந்தக் கனவை இனி இன்னும் பெரிதாக நிறைவேற்றுவேன். ஏழைகளின் மரியாதையைப் பெறுவேன்.
மேற்குவங்கத் தேர்தலில் பாஜக நிச்சயம் பெரும் வெற்றி காணும். நான் திரிணமூல் எம்.பி.யாக இரண்டு ஆண்டுகள் இருந்திருக்கிறேன். அதை நான் எனது தவறான முடிவு என்றே சொல்வேன். எனது தவறான முடிவுக்கு வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது என்பதாலேயே நான் பதவியை ராஜினாமா செய்தேன். அதைப் பற்றி இனியும் பேச வேண்டாம்.
நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரும் ஏழை மக்களின் நலனில் கவனம் செலுத்தியுள்ளேன். ஆனால், அதை நான் விளம்பரப்படுத்த விரும்பியதில்லை. என் திரைப்படங்களில் கூட ஏழை, எளியோரின் நலன் முன்னிறுத்தப்பட்டிருக்கும்.
மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடி கூறியதுபோல் வங்காளம் தங்கமாக ஜொலிக்கும் காலம் வந்தால் நான் மிகுந்த பெருமிதம் கொள்வேன்" என்றார்.
சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக அமலாக்கப் பிரிவு மிதுன் சக்ரவர்த்தியிடம் விசாரணை நடத்தியது. அப்போது அந்நிறுவனம் நடத்திய டிவி சேனலின் பிராண்ட் தூதராக இருக்க தனக்கு வழங்கப்பட்ட ரூ.1.2 கோடி பணத்தை மிதுன் அந்நிறுவனத்துக்கே திருப்பியளித்தார். அதன் பின்னர் அவர், திரிணமூலில் இருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குவங்கத்தில் இம்மாதம் 27 ம் தேதி தொடங்கி 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT