Published : 07 Mar 2021 05:14 PM
Last Updated : 07 Mar 2021 05:14 PM
மேற்கு வங்க மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி இழந்துவிட்டார், மக்களை அவமதித்துவிட்டார். மம்தாவின் ஸ்கூட்டர் நந்திகிராமத்தில் விழுந்துவிடும் என விதிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி காட்டமாகத் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் இருகட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதியும், ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தைப் பிரதமர் மோடி கொல்கத்தாவில் இன்று தொடங்கி வைத்தார்.
கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:
''என்னுடைய அரசியல் வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசும் சிறப்பைப் பெறுகிறேன். ஆனால், இதுபோன்ற மிகப்பெரிய கூட்டத்தில் பேசுவதற்கான ஆசியை இதுவரை பெறவில்லை. என்னுடைய ஹெலிகாப்டர் பறந்துவந்தபோது, மக்கள் இந்தக் கூட்டம் நடக்கும் மைதானத்தை நோக்கிக் கூட்டம் கூட்டமாக நகர்வதைக் காண முடிந்தது.
மேற்கு வங்க மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி இழந்துவிட்டார். திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரு பக்கம் நிற்கின்றன. மக்கள் ஒரு பக்கம் நிற்கிறார்கள்.
மம்தாவும், அவரின் அமைச்சரவையும் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையைத் தகர்த்துவிட்டனர். வங்காளத்தின் மக்களை அவமானப்படுத்தி, இங்குள்ள சகோதரிகளையும், மகள்களையும் துன்பப்படுத்தியுள்ளனர். ஆனால், இந்த மாநில மக்கள் நம்பிக்கையை இழக்கவில்லை, துணிச்சலை இழக்கவில்லை.
நம்முடைய மதிப்புகளுக்கு இந்த வங்கத்தின் மண் மதிப்பை வழங்கியிருக்கிறது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்கு இந்த வங்கத்தின் மண் புதிய உயிரைக் கொடுத்திருக்கிறது. தேசத்தின் அறிவியல் ஞானத்தை இந்த மண் அதிகப்படுத்தியுள்ளது.
இந்தப் புனிதமான மண்ணில் ஏராளமான மிகப்பெரிய தலைவர்கள் உருவாகியுள்ளதையும் மக்கள் பார்த்துள்ளார்கள். வங்கத்தின் வளர்ச்சியை அழிப்பவர்களையும் பார்த்துள்ளார்கள்.
மம்தாவின் ஸ்கூட்டர் பவானிபூருக்குச் செல்வதற்குப் பதிலாக நந்திகிராம் செல்கிறது. அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்றுதான் நினைப்பேன். யாரும் அழிந்துவிட வேண்டும் என நினைப்பவன் நான் கிடையாது. ஆனாலும் என்ன செய்வது? மம்தா பானர்ஜி ஓட்டிச் செல்லும் ஸ்கூட்டர் நந்திகிராமில் விழுந்தால் என்ன செய்ய முடியும்?
இந்த வங்கத்தின் மக்கள் உங்களைச் சகோதரி என்று தேர்ந்தெடுத்தார்கள். தங்களுக்குச் சகோதரியாகத் துணையாக இருப்பீர்கள் என்று நம்பினார்கள். ஆனால், நீங்கள் உங்கள் மருமகனுக்கு அத்தையாக மட்டுமே இருக்கிறீர்கள். இந்தக் கேள்வியைத்தான் இந்த மாநில மக்கள் உங்களிடம் கேட்கிறார்கள்.
இந்த மாநிலத்தில்தான் தாய்மார்கள் அவர்கள் சொந்த வீடுகளிலேயே குண்டர்களால் தாக்கப்படுகிறார்கள். அந்தக் கொடூர முகத்தை நாடே பார்த்தது. கடந்த 10 ஆண்டுகளில் வங்க மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றம் கொண்டு வந்திருக்கிறேன் என உங்களால் சொல்ல முடியுமா?
மேற்கு வங்கத்தில் ஜனநாயக அமைப்பு முறை எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பது எனக்குத் தெரியும். ஜனநாயக அமைப்பை பாஜக வலுப்படுத்தி வருகிறது. அரசு நிர்வாக முறை, காவல்துறை, நிர்வாகம் ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தி, மக்களின் நம்பிக்கைப் பெறுவோம்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT