Published : 06 Mar 2021 07:57 PM
Last Updated : 06 Mar 2021 07:57 PM
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐஎஸ்எப்) இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் 3 கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிப்பதில் சிக்கல் எழுந்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.
அதேநேரத்தில் மம்தாவுக்குக் கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக, ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே காங்கிரஸ், இடதுசாரிகள், இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆகியவை மூன்றாவது அணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கின்றன. ஆனால், இந்த 3 கட்சிகளுக்கு இடையே இன்னும் இடங்களைப் பிரிப்பதில் சிக்கல் நீடிப்பதால், வேட்பாளர்களை அறிவிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதில் இடதுசாரிகள், காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஏறக்குறைய ஒத்திசைவாகச் சென்றுவிட்ட நிலையில், கூட்டணிக்குள் புதிதாக வந்துள்ள ஐஎஸ்எப் கட்சி மட்டும்தான் கூடுதல் இடம் கேட்டுப் பிடிவாதம் செய்கிறது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா கூறுகையில், "இடதுசாரிகளிடம் இருந்து 30 இடங்களைப் பெற்றுக்கொண்ட ஐஎஸ்எப் கட்சி, இன்னும் இடங்கள் தேவை என்று காங்கிரஸ் கட்சியிடமும் இடங்களைக் கோருகிறது. ஆனால், கூடுதல் இடங்களை நாங்கள் ஒதுக்கினால் அது எங்களுக்குச் சிக்கலாகிவிடும். காங்கிரஸ் கட்சிக்கு 90 முதல் 92 இடங்கள் மட்டும்தான் கிடைக்கும். இதில் ஒதுக்குவது சாத்தியமில்லை.
கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே இடங்களைப் பிரித்துக்கொள்வதில் இன்னும் சுமுகமான முடிவு எட்டவில்லை. இடதுசாரிகளுக்கும், எங்களுக்கும் இடையே கூட்டணி குறித்த பேச்சும், இடங்களும் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், ஐஎஸ்எப் கட்சி தொடர்ந்து அதிக இடங்களைக் கேட்பதைப் பார்த்தால், கூட்டணியிலிருந்து விலகுவார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
அதிகமான இடங்களை ஒதுக்க முடியாது என்று நாங்கள் பலமுறை ஐஎஸ்எப் கட்சியிடம் தெரிவித்துள்ளோம். அந்தக் கட்சியின் அமைப்புரீதியான கட்டமைப்பு பற்றி யாருக்கும் தெரியாது. இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காலநேரம் குறைவாக இருப்பதால், விரைவாகப் பேசி முடிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
மேற்கு வங்கத் தேர்தலில் போட்டியிடும் 291 வேட்பாளர்களின் பெயரை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று அறிவித்துவிட்டார். பாஜகவும் முதல் இருகட்டத் தேர்தலுக்கான வேட்பாளர்களை இன்றுக்குள் அறிவித்துவிடும். ஆனால், காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியில்தான் குழப்பம் நீடித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT