Published : 06 Mar 2021 03:12 PM
Last Updated : 06 Mar 2021 03:12 PM
சரியான கட்சிக்கு வந்த சரியான மனிதர் தினேஷ் திரிவேதி. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மிகவும் ஆக்கபூர்வமாகச் செயல்படுவார் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த தினேஷ் திரிவேதி, கடந்த மாதம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். தினேஷ் திரிவேதி விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், திரிவேதி உறுதியாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் தினேஷ் திரிவேதி இன்று பாஜகவில் முறைப்படி இணைந்தார். அப்போது பேசிய தினேஷ் திரிவேதி, "இந்தப் பொன்னான தருணத்துக்காகவே நான் காத்திருந்தேன்" எனத் தெரிவித்தார்.
தினேஷ் திரிவேதி குறித்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கூறியதாவது:
''கடந்த 2 மாதங்களுக்கு முன் தினேஷ் திரிவேதி என்னைத் தனிப்பட்ட முறையில் சந்தித்தார். அப்போது இந்த நாட்டுக்கு நான் சேவை செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார். நீங்கள் தாராளமாக பாஜகவுக்கு வரலாம் என்று அழைப்பு விடுத்தேன்.
பிரதமர் மோடியின் தலைமையில் தேசத்துக்குச் சேவை செய்ய திரிவேதி விருப்பம் தெரிவித்தார். அரசியலில் நீண்ட அனுபவம் உடையவர் திரிவேதி. அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு, சித்தாந்தங்களுக்காகப் போராடியவர் தினேஷ் திரிவேதி. தெளிந்த நீரோடை போன்றவர் திரிவேதி. பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவர்களை ஏற்றுக்கொள்ளும் ஒரே கட்சி பாஜகவாகத்தான் இருக்க முடியும்.
நான் தினேஷ் திரிவேதியுடன் பேசியபோது, சரியான மனிதர் நீங்கள். ஆனால், தவறான கட்சியில் இருக்கிறீர்கள் என்று அடிக்கடி தெரிவித்தேன். ஆனால், இப்போது பாஜகவுக்கு வந்துள்ள திரிவேதியை நான் வரவேற்கிறேன். சரியான கட்சிக்கு வந்துள்ள சரியான நபர் திரிவேதி என அவரை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். பிரதமர் மோடியின் கீழ் நாட்டுக்குச் சேவை செய்ய அவரைப் பயன்படுத்துவோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு வங்க அரசியலில் திரிவேதி ஆக்கபூர்வமாகச் செயல்படுவார் என நம்புகிறேன்''.
இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT