Published : 06 Mar 2021 11:21 AM
Last Updated : 06 Mar 2021 11:21 AM
கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் விவகாரம் பெரும் சர்ச்சையை எழுப்பிய நிலையில் அதனை நீக்குமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலில் உள்ளன.
தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் உள்ள பெட்ரோல் நிலையங்களில், பிரதமர் மோடி உருவப்படம் இருக்கும் விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள், பதாகைகளை நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்நிலையில், கேரளாவில் கரோனா தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழில் பிரதமர் மோடி படம் இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் தெரிவித்து இருந்தது.
இதுதொடர்பாக சிபிஎம் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் மிதுன் ஷா, தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் " மாநிலத்தில் தேர்தல் நடத்தைவிதி முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
மாநிலத்தில் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டு சான்றிதழ் பெறும் போது அதில் பிரதமர் மோடியின் புகைப்படமும், அவர் பேசிய வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளது. பிரதமர் மோடி புகைப்படம் இருப்பது, வாக்காளர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். ஆதலால், தேவையான நடவடிக்கைகளை எடுத்து நீக்க வேண்டும்.’’ எனக் கோரியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கரோனா தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழில் பிரதமர் மோடி படத்தை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT