Published : 06 Mar 2021 09:35 AM
Last Updated : 06 Mar 2021 09:35 AM
'நந்திகிராம் மண்ணின் மைந்தரையே வரவேற்கும்; மே2ல் நீங்கள் தோற்று வெளியேறுவீர்கள்' என மம்தா பானர்ஜிக்கு சவால்விடுத்துள்ளார் அவரது முன்னாள் சகா சுவேந்து அதிகாரி.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. அதில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்தார்.
நந்திகிராம் தொகுதியில் மம்தா களமிறங்குவது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த சுவேந்து அதிகாரி, "மாண்புமிகு முதல்வரே, வேட்பாளர் பட்டியலின்படி தாங்கள் நந்திகிராமில் களமிறங்குவதில் மகிழ்ச்சி. அதை நான் வரவேற்கிறேன். ஆனால், மித்னாபூர் மக்கள் எங்களுக்கு மண்ணின் மைந்தரே தேவை, வெளியாட்கள் இல்லை என்று கோஷம் எழுப்புவார்கள். நாங்கள் உங்களை களத்தில் சந்திக்கிறோம். மே 2ல் நீங்கள் தோல்வியுற்று வெளியேறுவீர்கள்" என்று கூறியுள்ளார்.
நந்திகிராம் தொகுதி கிழக்கு மித்னாபூர் மாவட்டத்துக்கு உட்பட்டது. அதனால், மித்னாபூர் மக்கள் மண்ணின் மைந்தனாகிய தன்னையே தேர்வு செய்வார்கள் என்று கணித்து சுவேந்து அதிகாரி இக்கருத்தை முன்வைத்துள்ளார்.
சுவேந்து சவாலின் வலுவான பின்னணி:
நந்திகிராமில் சுவேந்து அதிகாரிக்கான செல்வாக்கு வலுவானது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஏனெனில் நந்திகிராமில் கடந்த 2007ல், ரசாயன ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது திரிணமூல் காங்கிரஸ் அங்கே தனது மக்கள் ஆதரவு நிலைப்பாட்டை உறுதி செய்தது. அதன்பின் திரிணமூல் தேர்தலில் வெற்றிபெற நந்திகிராம் போராட்டம், சிங்கூர் போராட்டம் கைகொடுத்தன.
நந்திகிராமில் திரிணமூலுக்கு வலுவான இடத்தைப் பெற்றுத் தந்ததில் சுவேந்து அதிகாரியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. களத்தில் அவர் இட்ட தளம்தான் பின்னாளில் வாக்குகள் மாறியது என்பதில் ஐயமில்லை என்பதை திரிணமூலின் இந்நாள் பிரமுகர்களே மறுக்கமாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.
இதனால், மம்தா பானர்ஜிக்கு நிச்சயமாக சுவேந்து சவால்விடும் வேட்பாளர் தான்.
தனது மக்கள் செல்வாக்கை ஆதாரமாகக் கொண்டே, நந்திகிராமில் குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலாவது மம்தாவை வீழ்த்துவேன் என சுவேந்து அதிகாரி சவால்விட்டதுள்ளம் இதன் அடிப்படையிலேயே.
சுவேந்துவின் சவாலை மறைமுகமாக ஒப்புக் கொள்ளும்ம் வகையிலேயே, மம்தாவும் பவானிபூர் தொகுதியில் போட்டியிடாவிட்டாலும் வேறு ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவேன் எனக் கூறியுள்ளதும் உணர்த்துகிறது.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT