Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM
மேற்கு வங்க மாநிலத்தின் 294 சட்டப்பேரவை தொகுதிகளில் 8 கட்ட தேர்தல் மார்ச் 27 முதல் தொடங்குகிறது. இங்கு பாஜக பிரச்சார மேடைகளில் ‘ஜெய் ஸ்ரீ ராம் (ஸ்ரீ ராமன் வாழ்க)’ எனும் கோஷம் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால், ராம பக்தர்களின் கோஷம் பாஜக தொண்டர்களுக்கானது என்றாகி விட்டது.
இதை சமாளிக்க ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, கொல்கத்தா காளி மீதான கோஷங்களை கையில் எடுத்தார். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் பாஜக.வை சமாளிக்க இந்த கோஷம் மட்டும் போதவில்லை என்று மம்தா மற்றும் திரிணமூல் கட்சியினர் நினைக்கின்றனர். இதையடுத்து, மார்ச் 11-ம் தேதி சிவராத்திரி வரவிருக்கும் நிலையில், காளியுடன் சேர்த்து சிவனையும் கையில் எடுத்துள்ளார் மம்தா.
தென்னிந்தியாவை தவிர்த்து மற்ற மாநிலங்களில் சிவனை போற்றும் ‘பம் பம் போலே’ (சிவனே போற்றி) கோஷமும் திரிணமூல் காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டங்களில் தற்போது இடம் பெறுகிறது. சிவனின் கைகளில் உள்ள உடுக்கையின் ஒலியை குறிக்கும் வகையில் ’பம் பம் போலே’ எனும் இந்திச் சொல், வீடுகள் மற்றும் கோயில்களின் சிவபூஜைகளில் கோஷமாக ஒலிக்கிறது.
மேலும், தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி செய்யும் மம்தா, தனது வேட்பு மனுக்களை மார்ச் 11 மகா சிவராத்திரி அன்று தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்மூலம் தான் ஒரு சிவபக்தர் என்பதை முதல் முறையாக பகிரங்கமாக வெளிக்காட்ட உள்ளார் என்று கட்சியினர் கூறுகின்றனர்.
இங்கு அவர் நந்திகிராம் பகுதி அமைந்துள்ள மித்னாபூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு அவர் நடத்திய போராட்டமே மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி அமைய காரணமானது. அதனால், இந்த தொகுதி மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதேசமயம், தனது பழைய தொகுதியான பவானிபூரிலும் மம்தா போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்துத்துவா அரசியலை முன்னிறுத்தி அங்கு கால் பதிக்க தொடங்கியுள்ள பாஜகவை, சிவகோஷம் மூலம் தடுத்து நிறுத்த முடியும் என்று மம்தா கருதுகிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கம்யூனிசம் ஆதிக்கம் கொண்ட மேற்கு வங்க அரசியலில் இந்துத்துவா பிரச்சாரம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT