Published : 05 Mar 2021 08:56 PM
Last Updated : 05 Mar 2021 08:56 PM
கரோனா பரவலை தடுப்பதற்காகவே தற்காலிமாக சில ரயில் நிலையங்களில் நடைமேடை அனுமதி சீட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
பிளாட்ஃபார்ம் டிக்கெட் எனப்படும் நடைமேடை அனுமதி சீட்டின் விலை குறித்து சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
கரோனா பரவலை தடுக்கும் வகையில், அதிக மக்கள் கூட்டம் கூடும் சில ரயில் நிலையங்களில் மட்டுமே தற்காலிமாக நடைமேடை அனுமதி சீட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட குறுகிய கால நடவடிக்கையான இது பல்லாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சில மாநிலங்களில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால், தேவையில்லாமல் மக்கள் நடைமேடைகளில் கூடுவதை ரயில்வே ஊக்கப்படுத்துவதில்லை. பொது மக்கள் நலன் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2020-ல் ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது. பின்னர் இது விலக்கிக் கொள்ளப்பட்டது. பண்டிகைகளின் போதும் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டப்படுத்துவது மண்டல ரயில்வே அதிகாரியின் பொறுப்பாகும். குறிப்பிட்ட சமயங்களில் நடைமேடை அனுமதி சீட்டின் விலையை உயர்த்திக்கொள்ள 2015-ம் ஆண்டு முதல் மண்டல ரயில்வே அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT