Last Updated : 05 Mar, 2021 08:10 PM

3  

Published : 05 Mar 2021 08:10 PM
Last Updated : 05 Mar 2021 08:10 PM

அமெரிக்க டாலர் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு: ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலத்தை பிரமாணப் பத்திரமாக உயர் நீதிமன்றத்தில் சுங்கத்துறை தாக்கல்

கேரள முதல்வர் பினராயி விஜயன் : கோப்புப்படம்

கொச்சி


ஓமன் நாட்டிலிருந்து தூதரகத்தின் உதவியுடன் அமெரிக்க டாலர்களைக் கடத்தியதில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கும், சில அமைச்சர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஸ்வப்னா சுரேஷ். இவர் மீது அமெரிக்க டாலர்களைக் கடத்திய வழக்கும் இருக்கிறது. இந்த வழக்கில் அவர் அளித்த வாக்குமூலத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

கேரள மாநிலத்தில் அடுத்த சில வாரங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் முதல்வர் பினராயி விஜயன் மீதும் அமைச்சர்கள் மீதும் டாலர் கடத்தல் தொடர்பாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஓமன் நாட்டிலிருந்து அன்னியச் செலாவணியை அதாவது 1.90 லட்சம் அமெரிக்க டாலர்களை(ரூ.1.30 கோடி) கடத்திய குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள ஓமன் நாட்டு தூதரகத்தில் உள்ள சில அதிகாரிகளின் உதவியுடன், மஸ்கட்டிலிருந்து டாலர்களை ஸ்வப்னா சுரேஷ் திருவனந்தபுரத்துக்குக் கடத்தியாக சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த வழக்கு தொடர்பாக சுங்கத்துறையினர் ஸ்வப்னா சுரேஷைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின்போது, சிஆர்பிசி 180 மற்றும் 164ன் கீழ் ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தை உயர் நீதிமன்றத்தில் சுங்கத்துறையினர் இன்று பிரமாணப்பத்திரமாகத் தாக்கல் செய்தனர்.

கேரள உயர் நீதிமன்றத்தில் சுங்கத்துறை ஆணையர் சுமித் குமார் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:

ஓமன் நாட்டிலிருந்து திருவனந்தபுரத்துக்கு ரூ.1.30 கோடி அமெரிக்க டாலர்களை கடத்திய வழக்கில் ஸ்வப்னா சுரேஷிடம் விசாரிக்கப்பட்டது. சிஆர்பிசி 108, 164 ஆகியவற்றின் கீழ் வாக்குமூலம் அளித்தார்.

அந்த வாக்குமூலத்தில் ஸ்வப்னா சுரேஷ் சில அதிர்ச்சிக்குரிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், சில அமைச்சர்கள் ஆகியோருக்கு டாலர் கடத்தலில் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் தூதருடன், முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. இவர்களுக்கு இடையேதான் சட்டவிரோதமாக அன்னியச் செலாவணி பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஆகியோர் தூதரகத்தின் உதவியுடன் அன்னிய செலாவணியைக் கடத்தியுள்ளதைத் தெரிவித்துள்ளார்.

தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சரித்தும் டாலர் கடத்தல் வழக்கில் தொடர்பு இருக்கிறது. இவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.

டாலர் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரின் முதன்மைச் செயலாளர், தனிப்பட்ட அதிகாரி ஆகியோருடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் கடத்தல், மற்றும் டாலர் கடத்தல் வழக்கில் தொடர்புடைய உயர் பதவிகளில் உள்ளவர்களின் பெயரை வெளியிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சிறையில் ஸ்வப்னா சுரேஷுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாகக் கூடுதல் மாஜிஸ்திரேட்(பொருளாதாரப்பிரிவு) முன் சமீபத்தில் ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்தார்.

ஸவப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருக்குச் சிறையில் கூடுதல் பாதுகாப்பு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். அப்போது சில கருத்துக்களை நீதிபதி தெரிவித்தார். அந்த கருத்துக்குப் பதில் அளிக்கும் விதமாக மாநில அரசு மனுத்தாக்கல் செய்தது. மாநில அரசு தாக்கல் செய்த மனுவுக்கு எதிராகவே இன்று சுங்கத்துறை பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x