Published : 05 Mar 2021 04:59 PM
Last Updated : 05 Mar 2021 04:59 PM
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் களம் சூடாகி வரும் நிலையில், அதைப் பயன்படுத்தி கொல்கத்தாவில் உள்ள ஒரு ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் ஒருவர், அரசியல் கட்சிகளின் கோஷங்கள் அடங்கிய இனிப்புகள், மோடி, மம்தா உருவம் வரையப்பட்ட இனிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளார்.
சந்தையில் வித்தியாசமாக விற்பனைக்கு வந்துள்ள இந்த இனிப்புகளுக்கு மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சியினர் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக 294 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி் 291 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை இன்று அறிவித்துவிட்டது. இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, மூன்றாவது அணியாக இடதுசாரிகள், காங்கிரஸ், மதச்சார்பற்ற முன்னணி இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன. இதனால் தேர்தல் களம் சூடாகியுள்ளது.
ஆனால், சூடான தேர்தல் களத்தைத் திறமையாக பயன்படுத்தும் கொல்கத்தாவில் உள்ள ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர். கொல்கத்தாவில் உள்ள பல்ராம் மாலிக் ராதாராம் மாலிக் எனும் பிரபல இனிப்புக் கடை பால், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களால் செய்யப்பட்ட சந்தேஷ் எனும் வித்தியாசமான இனிப்பு வகைகளைத் தயார் செய்து மக்களையும், அரசியல் கட்சியினரையும் கவர்ந்து வருகிறது.
இந்தத் தேர்தலில் பாஜகவின் தேர்தல் கோஷங்கள், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள்,காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேர்தல் கோஷங்களை இனிப்புகளைப் பதிவு செய்து அதை வித்தியாசமாக விற்பனை செய்கிறது.
அதுமட்டுமல்லாமல், மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி, பாஜக சின்னம், திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரிகள் சின்னம் ஆகியவற்றை இனிப்புகளில் படங்களாக வரைந்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த இனிப்புகளுக்கு மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியலும்நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் சுதீப் மாலிக் கூறுகையில் " அரசியல் கட்சிகளின் கோஷங்கள் எழுதப்பட்ட இனிப்புகளை விற்பனைக்குப் புதிதாகக் கொண்டு வந்துள்ளோம். அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆட்டம் தொடங்கிவிட்டது, ஜெய் ஸ்ரீராம், தீதி என்று எழுதப்பட்ட இனிப்புகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இது தவிர அரசியல் கட்சிகளின் சின்னங்கள், தலைவர்களின் படங்கள் வரையப்பட்ட இனிப்புகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த இனிப்புகள் 250 கிராம் ரூ.170 ஆகவும், கோஷங்கள் எழுதப்பட்ட இனிப்புகள் ரூ.70க்கும் விற்கப்படுகிறது.
கிரிக்கெட் உலகக் கோப்பை நடக்கும் போது, உலகக்கோப்பை போன்றும், கிரிக்கெட் பேட், பந்து போன்று இனிப்புகளும் தயார் செய்வோம். தேர்தல் மிகப்பெரிய திருவிழா என்பதால், அதற்கு ஏற்றார்போல் இனிப்புகளைத் தயார் செய்கிறோம்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT