Last Updated : 05 Mar, 2021 03:53 PM

3  

Published : 05 Mar 2021 03:53 PM
Last Updated : 05 Mar 2021 03:53 PM

நந்திகிராமில் மம்தா பானர்ஜி போட்டி: 50 பெண்கள், 42 முஸ்லிம்உள்பட 291 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது திரிணமூல் காங்கிரஸ்

மே.வங்க தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 291 வேட்பாளர்கள் பெயரையும் வெளியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி : படம் ஏஎன்ஐ

கொல்கத்தா

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி இன்று அறிவித்துள்ளார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது அதில் நந்திகிராம் தொகுதி மம்தா பானர்ஜிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவேந்து அதிகாரி பாஜக சார்பில் போட்டியிடுவாரா என்பது இன்னும் தெரியவில்லை.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம்தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி இந்தமுறை 291 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா(ஜிஜேஎம்) கட்சிக்கு 3 இடங்களையும் ஒதுக்கியுள்ளது.

முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது பவானிபூரில் எம்எல்ஏவாக இருந்து வருகிறார், கடந்த 2 முறையும் அந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மம்தா பானர்ஜி இந்த முறை நந்திகிராம் தொகுதியிலிருந்து போட்டியிட உள்ளார்.

291 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாங்கள்தான் மாநிலத்தில் முதன்முதலாக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளோம். இந்த முறை 291 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதில் 50 பெண் வேட்பாளர்கள், பட்டியலினத்தவர்கள் 79 பேர், பழங்குடியினர் 17 பேர், 42 முஸ்லிம் வேட்பாளர்கள் என 291 பேர் போட்டியிடுகின்றனர்.

எங்கள் கூட்டணிக் கட்சியான கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சிக்கு 3 இடங்களை ஒதுக்கியுள்ளோம். டார்ஜ்லிங், கிலம்பாங், குர்சியாங் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் எனக்கு ஆதரவு அளித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஜார்கண்ட் முதல்வர் சிபுசோரன், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன்

நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தேன் அதன்படி இந்தமுறை அங்குப் போட்டியிடுகிறேன். பவானிபூரி எனக்கு இளைய சகோதரி தொகுதி போன்றது என்றால், நந்திகிராம் மூத்த சகோதரி போன்றது. இந்த முறை பவானிபூரில் சோபன்தீப் சாத்தோபத்யாயே போட்டியிட உள்ளார். புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதால், பலருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை" இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x