Last Updated : 05 Mar, 2021 01:53 PM

10  

Published : 05 Mar 2021 01:53 PM
Last Updated : 05 Mar 2021 01:53 PM

நந்திகிராம் தொகுதியில் மம்தாவை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வோம்: பாஜக சவால்: திரிணமூல் வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி : கோப்புப்படம்

புதுடெல்லி

மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வோம் என்று பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே திரிணமூல் காங்கிரஸ் கட்சி 294 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம்தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி இந்த முறை நந்திகிராம் தொகுதி, பவானிபூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடப்போவதாகத் தெரிவித்துள்ளார். நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாகன சுவேந்து அதிகாரி சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அவரை எதிர்த்துக் களமிறங்குவதாக மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் திலிப் கோஷ்

இதுகுறித்து மே.வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் இன்று நிருபர்களிடம் கூறுகையில் " நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜியை நாங்கள் எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் அவர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார். நந்திகிராம் தொகுதியில் யார் போட்டியிடுவார் என்பதுகுறித்து விரைவில் கட்சித் தலைமை அறிவிக்கும். கட்சியின் தேர்வுக் குழு ஆலோசித்து வருகிறது, முதல் இருகட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பட்டியல் இன்று வெளியாகும்.

நந்திகிராம் தொகுதியில் நாங்கள் நிறுத்தும் வேட்பாளர் மம்தா பானர்ஜிக்கு கடும் சவால் அளிப்பார். இந்தமுறை மே.வங்கத்தில் 200 இடங்களைக் கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பபுல் சுப்ரியோ கூறுகையில் " பாஜக ஜனநாயகக் கட்சி, தகுதியானவர்கள் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவார்கள். நந்திகிராம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுவேந்து அதிகாரி, மம்தாவுக்கு சவால் விடுத்துள்ளார். அவரை 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன் எனத் தெரிவித்துள்ளார். எங்கள் இலக்கை நோக்கி செல்லோம். ஆனால், சுவேந்துஅதிகாரி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 294 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை முதல்வர் மம்தா பானர்ஜி தனது இல்லத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிகிறது.

இந்த முறை திரிணமூல் காங்கிரஸ், " வங்காளத்துக்குத் தேவை மண்ணின் மகள்" என்ற கோஷத்தை முன்னெடுத்துள்ளது. கடந்த முறை பவானிபூரில் மட்டும் போட்டியிட்ட மம்தா பானர்ஜி இந்த முறை நந்திகிராமிலும் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

இந்த முறை மே.வங்கத்தில் மும்முனைப் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது. பாஜக, திரிணமூல் காங்கிரஸ் தவிர்த்து இடதுசாரிகள், காங்கிரஸ், இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆகிய 3 கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளதால், தேர்தல் கடும் போட்டியானதாக இருக்கும்.

கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 294 இடங்களில் 211 இடங்களில் வென்று ஆட்சியை 2வதுமுறையாகக் கைப்பற்றியது, காங்கிரஸ்44 இடங்களிலும், இடதுசாரிகள் 33 இடங்களிலும், பாஜக3 இடங்களிலும் வென்றனர்.

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத தேர்தலில் பாஜக 18 இடங்களில் வென்றது மம்தாவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களில்தான் வென்றது. காங்கிரஸ் ஒரு இடத்தில் வென்றது. இடதுசாரிகளுக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை. பாஜகவின் திடீர் வளர்ச்சி அனைத்துக் கட்சிகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x