Published : 05 Mar 2021 01:01 PM
Last Updated : 05 Mar 2021 01:01 PM

எல்எல்ஆர், ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ அலுவலகம் போகத் தேவையில்லை: ஆன்லைன் மூலம் 18 சேவைகள் அறிமுகம்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

ஓட்டுநர் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், ஆர்.சி புத்தகம் பெறுதல் உள்ளிட்ட எதற்கும் இனிமேல் மண்டல போக்குவரத்து அலுவலகத்துக்குச் செல்லத் தேவையில்லை. ஆதார் அடிப்படையில் 18 விதமான சேவைகளை ஆன்-லைனில் பெறும் வசதியை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை கொண்டுவந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

"குடிமக்களுக்கு வசதியான, இடையூறு இல்லாத சேவைகளை வழங்கும்பொருட்டு, ஆதார் அடிப்படையில் பல்வேறு சேவைகளைப் பெறும் வசதியைப் பெறுவதற்காக ஊடகங்கள், அறிவிக்கைகள் மூலம் தேவையான விரிவான ஏற்பாடுகளை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் செய்யும்" எனத் தெரிவித்துள்ளது.

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்.சி.புத்தகம் ஆகியவற்றோடு ஆதார் எண்ணை இணைப்பது குறித்து வரைவு அறிவிக்கையை ஏற்கெனவே வெளியிட்டிருந்தது. அதன்பின் இந்த சேவைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

இதன்படி, வாகன உரிமம், வாகனம் தொடர்பான 18 வகையான சேவைகளுக்கு வாகன ஓட்டிகள் மண்டல போக்குவரத்து நேரடியாகச் செல்ல வேண்டியதில்லை.ஆதார் மூலம் ஓட்டுநர் உரிமம், ஆர்சி புக்கை இணைத்திருந்தால் இந்த சேவைகளை ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தவாறே பெற முடியும்.

ஓட்டுநர் உரிமம், ஆர்சிபுக்கில் ஆதார் எண்ணை இணைத்திருந்தால், ஆன்-லைன் மூலம் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு, டூப்பிளிகேட் ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றுதல் உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலம் பெறலாம்.

ஆன்-லைன் மூலம் பெறக்கூடிய 18 வகையான சேவைகள் விவரம்


1. பழகுநர் உரிமம்(எல்எல்ஆர்)
2. ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு(வாகனத்தை இயக்கிக்காட்டுதல் தேவையில்லை என்றால்)
3. டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ்
4. ஓட்டுநர் உரிமம், ஆர்சிபுக்கில் முகவரி மாற்றுதல்
5. சர்வதேச அளவில் ஓட்டுநர் உரிமத்துக்கு அனுமதி
6. வாகன உரிமத்தை ஒப்படைத்தல்
7. வாகனத்துக்குத் தற்காலிகமாகப் பதிவெண் பெற விண்ணப்பித்தல்
8. முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட வாகனத்துக்கு பதிவெண் பெற விண்ணப்பித்தல்
9. வாகனத்துக்கு டூப்ளிகேட் பதிவெண் பெற விண்ணப்பித்தல்
10. என்ஓசி சான்றிதழ் பெற விண்ணப்பித்தல்
11. வாகனத்தின் உரிமையாளரை மாற்றுவதற்கு விண்ணப்பித்தல்
12. வாகன ஆர்சி புத்தகத்தில் முகவரியை மாற்றுவது குறித்து விண்ணப்பித்தல்
13. அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி பெற விண்ணப்பம் பதிவு செய்தல்
14. உயர் அதிகாரிகளுக்கு வாகனத்தைப் பயன்படுத்தப் பதிவு செய்ய விண்ணப்பித்தல்
15. வாகனத்தை வாடகைக்கு எடுப்பது தொடர்பான ஒப்பந்தத்தைப் பதிவு செய்தல்
16. வாகனத்தை வாடகைக்கு எடுத்த காலம் முடிந்தபின் ஒப்பந்தத்தை ரத்து செய்தல்
17. வாகனத்தின் உரிமத்தை மாற்றுவது குறித்து விண்ணப்பித்தல்
18. தூதரக அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு புதிய வாகன பதிவெண் பெற விண்ணப்பித்தல்

இந்த சேவைகளை ஆன்-லைன் மூலம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x