Published : 04 Mar 2021 07:31 PM
Last Updated : 04 Mar 2021 07:31 PM
தெருவில் திரிந்த கர்ப்பிணிப் பசுவின் வயிற்றில் 71 கிலோ குப்பை கண்டறியப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை செய்தும் தாய்ப் பசுவும் சேயும் உயிரிழந்த அவலம் ஃபரிதாபாத்தில் நிகழ்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் நகரங்களில் சுமார் 50 லட்சம் பசுக்கள் சுற்றித் திரிவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவை பெரும்பாலும் தெருக்களில் கொட்டப்படும் கழிவுகளையும் பிளாஸ்டிக்கையும் உண்டு வாழ்கின்றன.
இதற்கிடையே ஃபரிதாபாத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சாலை விபத்தில் சிக்கிய தெருவில் திரிந்த ஒரு பசு பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அறக்கட்டளை சார்பில் மீட்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் அதைச் சோதித்தபோது பசு கர்ப்பமாக இருந்ததும், அது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததும் தெரிய வந்தது.
4 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் பசுவின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிக், நகங்கள், மார்பிள்கள் மற்றும் பிற குப்பைகள் சுமார் 71 கிலோ அளவுக்குக் கண்டறியப்பட்டன. பிரசவத்துக்கு முன்பாக இவற்றை அகற்ற முடிவு செய்யப்பட்டது. எனினும் தாயின் கருப்பையில் வளரப் போதிய இடம் இல்லாததால் பசுக் கன்று உயிரிழந்தது.
3 நாட்களுக்குப் பிறகு தாய்ப் பசுவும் பரிதாபமாக உயிரிழந்தது. இதற்கு முன்பாக ஹரியாணாவில் பசுவின் வயிற்றில் இருந்து அதிகபட்சமாக 50 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை 71 கிலோ குப்பையைக் கொண்டிருந்த பசுவும் சேயும் உயிரிழந்தன.
இத்தகைய செய்திகள் இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மற்றும் தெரு விலங்குகள் பராமரிப்பு ஆகியவை முறைப்படுத்தப்படாததையே காண்பிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT