Published : 04 Mar 2021 12:51 PM
Last Updated : 04 Mar 2021 12:51 PM
தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பிரதமர் மோடியின் புகைப்படம் அடங்கிய விளம்பர பேனர்கள், பதாகைகள், சுவரொட்டிகள் அனைத்தையும் அடுத்த 72 மணிநேரத்துக்குள் அகற்றத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டத் தேர்தல் வரும் 27-ம்தேதி 30 தொகுதிகளுக்கு நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால், கடும் கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
ஆனால், மாநிலத்தின் பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு தொடர்புள்ள அலுவலகங்களில், பிரதமர் மோடி புகைப்படம் அடங்கிய விளம்பர பேனர்கள், பதாகைகள் இன்னும் அகற்றப்படாமல் வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் பலர் நேற்று தேர்தல் ஆணைய அதிகாரியிடம் சென்று பிரதமர் மோடியின் புகைப்படம் அடங்கிய விளம்பரங்கள் பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் பல்வேறு விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. ஆதலால், அந்த விளம்பர பேனர்களை அகற்றவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு 1000 புகார்கள் வந்தநிலையில், அதில் 450 புகார்கள் உண்மையானவை எனத் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் இருக்கும் பிரதமர் மோடி புகைப்படம் பதித்த விளம்பரங்களை அகற்ற மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது
இது தொடர்பாக மாநிலத் தேர்தல் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி கூறுகையில் " தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட அதிகாரிக்கும் பிறப்பித்த உத்தரவில், பெட்ரோல் நிலையங்களில் உள்ள பிரதமர் மோடி புகைப்படம் கொண்ட விளம்பரங்களை அடுத்த 72 மணிநேரத்துக்குள் அகற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம்.
புகைப்படம் தொடர்பாக எங்களுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. தேர்தல் நடத்தை விதிகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை மீறினாலும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிக்கையாகக் கேட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT