Last Updated : 03 Mar, 2021 07:44 PM

 

Published : 03 Mar 2021 07:44 PM
Last Updated : 03 Mar 2021 07:44 PM

5 மாநிலத் தேர்தல்: முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை உறுதி செய்ய பாஜக மத்திய தேர்தல் குழு நாளை கூடுகிறது

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா : கோப்புப்படம்

புதுடெல்லி

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை உறுதி செய்ய பாஜகவின் மத்திய தேர்தல் குழு நாளை கூடுகிறது.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மத்திய தேர்தல் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

மேற்கு வங்கம், அசாம் மாநிலத்தில் வரும் 27-ம் தேதி முதல்கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படலாம்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

நாளை கூடும் பாஜக மத்திய தேர்தல் குழு, அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்களை மட்டும் உறுதி செய்ய உள்ளது. மத்திய தேர்தல் குழுவுடன் மேற்கு வங்கம், அசாம் மாநில பாஜக நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.

ஒரு தொகுதிக்கு 5 வேட்பாளர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அதில் ஒரு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அசாம் மாநிலமுதல்வர் சர்பானந்த சோனாவால், அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, மாநில பாஜக தலைவர் ரஞ்சித் தாஸ், மே.வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

இதுகுறித்து மே.வங்க பாஜக மாநிலத் தலைவர் திலிப் கோஷ் கூறுகையில் " முதல் இருகட்ட தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் 4 முதல் 5 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிலிருந்து ஒரு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளார். நாளை கூடும் மத்திய தேர்தல் குழு இந்த வேட்பாளர்களை உறுதி செய்யும்.

முதல் கட்டமாக மார்ச் 27-ம் தேதி மேற்கு வங்கத்தில 30 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 1-ம்தேதி 2-ம் கட்டத்தில் 30 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இந்த 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நாளை உறுதி செய்யப்பட்டுவிடும்" எனத் தெரிவித்தார்

இதில் 2-ம் கட்டத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடக்கிறது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x