Published : 02 Mar 2021 08:01 PM
Last Updated : 02 Mar 2021 08:01 PM
மேற்குவங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தைத் தடை செய்ய முயல்கிறார்கள், ஆனால், லவ் ஜிகாத்தையும், பசு வதையையும் கண்டுகொள்ளவில்லை, அதற்குத் தடை விதிக்கவில்லை என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காட்டமாகத் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக முயற்சிகளைச் செய்து வருகிறது. அதேசமயம், கடும் போட்டியளிக்கும் பாஜகவும் ஆட்சியைக் கைப்பற்றக் காய்களை நகர்த்தி வருகிறது. இரு கட்சிகளுக்கு இடையேதான் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.
இந்த சூழலில் மால்டா மாவட்டம், கஜோல் நகரில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் குறிப்பிட்ட வகுப்பினரை திருப்திப்படுத்தும் அரசியலைத்தான் திரிணமூல் காங்கிரஸ் செய்து வருகிறது. துர்கா பூஜை இன்று மேற்கு வங்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது, ஆனால், பசு வதை தீவிரமாக நடக்கிறது. மக்களின் உணர்வுகளை மதிக்காமல், பசுக் கடத்தல் நடக்கிறது. ஆனால், மாநில அரசு மவுனமாக இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், ஜெய் ஸ்ரீராம் எனும் கோஷத்தைத் தடை செய்யவும் சதி நடக்கிறது. அவ்வாறு யாரேனும் கோஷமிட்டால் தாக்கப்படுகிறார்கள்.
இந்துப் பெண்களை வேற்று மதத்தினர் திருமணம் செய்து மதமாற்றும் லவ் ஜிகாத் நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் லவ்ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவந்தோம், ஆனால், மேற்குவங்கத்தில் திருப்திப்படுத்தும் அரசியல் நடக்கிறது. பசு வதையையும், லவ் ஜிகாத்தையும் தடை செய்ய முடியாமல் மாநில அ ரசு இருக்கிறது. ஆபத்தான செயல்கள் நேரம் வரும்போது, அதன் பலன்களைக் கொடுக்கும்.
மே.வங்க முதல்வர் மம்தா சகோதரிக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உத்தரப்பிரதேசத்தில் ஒரு அரசு இருந்தது. அயோத்தியில் ராம பக்தர்கள் மீது துப்பாக்கிக் குண்டுகளைப் பயன்படுத்தியது, இப்போது அந்த அரசின் கதியைப் பார்த்தீர்களா. மேற்குவங்கத்திலும் அந்த நிலை வரும் நேரம் வந்துவிட்டது.
பாஜக தலைமை, கட்சியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் மே.வங்கம் வந்து இங்குள்ள சகோதரர்கள், சகோதரிகளுடன் இணைந்து, வங்காளத்தின் அடையாளத்தை மீண்டும் கட்டமைப்பார்கள், புதிய மாற்றத்தைக் கொண்டு வருவார்கள். இந்தியக் கலாச்சாரத்தின் அடையாளமாக மேற்கு வங்கம் எப்போதும் இருக்கும். சுதந்திரப்போராட்ட காலத்தில் புரட்சியின் விளைநிலமாக இந்த மண் இருந்துள்ளது. ஆனால் இங்கு நடப்பவை ஒட்டுமொத்த தேசத்தையும் கவலைப்பட வைக்கிறது
இவ்வாறு ஆதித்யநாத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT