Published : 05 Nov 2015 02:56 PM
Last Updated : 05 Nov 2015 02:56 PM
பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, அம்மாநில துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கு, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா புகார் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், டெல்லியின் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் கட்டுவதற்காக திட்டமிடப்பட்டிருந்த நிலம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியின் முக்கியப் பகுதியான தீனதயாள் உபாத்யா மார்கில் பாஜகவின் அலுவலகத்துக்காக நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது டெல்லியின் குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் கட்டுவதற்காக திட்டமிடப்பட்டு இருந்திருக்கிறது. இதை புகாராகக் குறிப்பிட்டு, மணிஷ் சிசோடியா டெல்லியின் துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து தனது இருபக்கக் கடிதத்தில் சிசோடியா, பள்ளிக்கூடம் கட்டுவதற்காக இருந்த நிலத்தை திடீர் என பாஜகவுக்கு துணைநிலை ஆளுநர் ஒதுக்கியது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவின் லாபத்துக்காக போடப்பட்ட உத்தரவை நஜீப் ஜங் திரும்பப் பெற வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி வளர்ச்சி ஆணையத்தின் தலைவர் என்ற முறையில், துணைநிலை ஆளுநருக்கு நிலம் ஒதுக்க உரிமை உள்ளது என்றும், ஆனால் நர்சரி பள்ளி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஓர் அரசியல் கட்சிக்கு ஒதுக்க அவருக்கு உரிமை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதை விடுத்து மத்திய அமைச்சர்களுக்காக இருக்கும் பங்களாக்களை வேண்டுமானால் ஒதுக்கி இருக்கலாம் எனவும் தனது கடிதத்தில் சிசோடியா யோசனை கூறியுள்ளார்.
டெல்லியில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் நாடு முழுவதிலும் உள்ள 10 அரசியல் கட்சிகளுக்கு குத்தகை நிலம் மிக முக்கியமான பகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், மிக அதிகமான அளவுகளில் பாஜக மற்றும் காங்கிரஸுக்கும் நிலம் கிடைத்துள்ளது. கடந்த 2010-ல் காங்கிரஸுக் கோட்லா சாலையில் 8,093 சதுர அடிகள் மற்றும் பாஜகவிற்கு கடந்த வருடம் தீன்தயாள் உபாத்யா மார்கில் 8,095 சதுர அடிகளிலும் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT