Published : 01 Mar 2021 08:06 PM
Last Updated : 01 Mar 2021 08:06 PM
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இந்த வாரத்தில் வெளியிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது குறித்து கடந்த வாரம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இதில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இதில் தமிழகத்தில் நடக்கும் தேர்தலில் ஆளும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது. மேற்குவங்கத்திலும், அசாமிலும் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக்கூட்டணி போட்டியிடுகிறது. கேரளாவில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது.
தமிழகம், கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நடக்கும் தேர்தலில் பல்வேறு கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்தும், தனித்தும் போட்டியிடுகிறது. இந்த மாநிலங்களில் போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்யும் பணிகளையும் பாஜக தலைமை ஏறக்குறைய உறுதி செய்யும் நிலையில் இருக்கிறது.
இதையடுத்து, இந்த 5 மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான முதல்கட்டப் பட்டியலை இந்த வாரத்தில் பாஜக தலைமை வெளியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் வரும் 4-ம் தேதி தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் உள்ளிட்டபலர் பங்கேற்கிறார்கள். இந்தக் கூட்டத்தின் முடிவில் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT