Published : 01 Mar 2021 04:28 PM
Last Updated : 01 Mar 2021 04:28 PM
என் மீது அபாண்டமான ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார் அமித் ஷா. அதை நிரூபிக்காவிட்டால் அவர் மீது அவதூறு வழக்குத் தொடர்வேன் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்காலில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, அவர் பேசுகையில், "பிரதமர் மோடி புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ.15 ஆயிரம் கோடி நிதி அனுப்பினார். ஆனால், முதல்வராக இருந்த நாராயணசாமி, அதில் ஒரு பகுதியை எடுத்து சோனியா காந்தி குடும்பத்துக்கு அனுப்பிவிட்டார்" எனக் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், புதுச்சேரி முன்னாள் முதல்வருமான நாராயணசாமியிடம், அமித் ஷா கூறிய குற்றச்சாட்டுகள் குறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்கு நாராயணசாமி அளித்த பதிலில் கூறியதாவது:
''உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றைய கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் மோடி ரூ.15 ஆயிரம் கோடியைப் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக அனுப்பினார், அதில் ஒரு பகுதி தொகையை எடுத்து, நான் சோனியா காந்தி குடும்பத்துக்குக் கொடுத்துவிட்டேன் என்று குற்றம் சாட்டியுள்ளார். இது உண்மையில் எனக்கு எதிரான தீவிரமான குற்றச்சாட்டு. என் மீது அவதூறு கூறி, என் மதிப்பையும் மரியாதையையும், சோனியா காந்தி குடும்பத்தின் மாண்பையும் குலைக்கும் வகையில் அமித் ஷா பேசியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அமித் ஷா நிரூபிக்காவிட்டால், நான் அவர் மீது அவதூறு வழக்குத் தொடர்வேன்.
அமித் ஷா பொய்யான குற்றச்சாட்டைக் கூறியிருந்தால், அவர் புதுச்சேரி மக்களிடமும், இந்த தேசத்திடமும் மன்னிப்பு கோர வேண்டும். இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா என நான் அவருக்குச் சவால் விடுகிறேன்.
மாநிலத்தின் ஆளுநராகத் தமிழிசையை நியமித்தபின் சூழல் மேலும் மோசமடைந்துள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் பிரதமர் மோடி துணைநிலை ஆளுநராக கிரண்பேடியை நியமித்தார். எங்கள் அரசின் கோப்புகளில் கையொப்பம் இடாமல், தொடர்ந்து தாமதித்தார். தொடர்ந்து எங்கள் அரசுக்கு எதிராகவே கிரண்பேடி பேசிவந்தார். எங்கள் மாநிலத்துக்காக நல்ல திட்டங்கள் என்ன கூறினாலும், கோரினாலும் அதை அமித் ஷா நிராகரித்தார். நாங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தபின், கிரண் பேடி மாற்றப்பட்டு, தமிழிசை நியமிக்கப்பட்டார். அவரின் தலைமையில் ஆட்சிக் கவிழ்ப்பு வேகமாக நடந்தது.
சென்னையிலிருந்து பாஜக தலைவர்கள் புதுச்சேரியில் முகாமிட்டு, கோடிக்கணக்கில் பணத்தைக் கொண்டுவந்து எங்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கினர். எனக்கு அடுத்தாற்போல் இருந்த மூத்த அமைச்சர் நமச்சிவாயத்துடன் கடந்த ஓராண்டாக பாஜக தொடர்பில் இருந்தது. அமித் ஷா தலைமையில் புதுச்சேரி அரசு கவிழ்க்கப்பட்டது. நமச்சிவாயம் வருமான வரி சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டார். திமுக எம்எல்ஏ வெங்கடேசனும் தொடர்ந்து மிரட்டல் விடுத்த நிலையில் பாஜகவில் இணைந்துவிட்டார்''.
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT