Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM

பிரதமர் மோடி குறித்து பெருமிதம் கொள்கிறேன்: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் புகழாரம்

ஜம்மு

பிரதமர் நரேந்திர மோடி குறித்து பெருமிதம் கொள்கிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

கபில் சிபல், சசி தரூர், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர், கட்சி தலைமையின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஜம்முவில் நேற்று முன்தினம் 23 தலைவர்களும் ஒன்றுகூடினர். அப்போது அவர்கள் கூறும்போது, "காங்கிரஸ் பலவீனமாகிவிட்டது, கட்சியை பலப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஜம்முவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் குலாம் நபி ஆசாத் பேசியதாவது:

பல்வேறு தலைவர்களின் சிறப்பு குணாதிசயங்களை கண்டுவியந்திருக்கிறேன். நான் கிராமத்தைச் சேர்ந்தவன். பிரதமர் மோடியும் கிராமத்தில் இருந்து தலைவராக உருவெடுத்தவர். எங்களுக்குள் அரசியல் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும் பிரதமர் மோடியின் குணாதிசயத்தைப் பார்த்து பெருமிதம் கொள்கிறேன். அவர் தனது பூர்விகத்தை மறைக்க விரும்பவில்லை. தேநீர் விற்றதை பகிரங்கமாக கூறியுள்ளார்.

ஆனால் சிலர் மாயஉலகத்தில் வாழ்கின்றனர். அவர்கள் உண்மையோடு தொடர்பை இழந்துவிட்டனர். நான் உலகம் முழுவதையும் சுற்றியுள்ளேன். எனினும் எனது உலகம், எனது கிராமத்தில் உள்ளது. 7 நட்சத்திர ஓட்டல்களைவிட எனது கிராமத்தில் எனது மக்களோடு அமர்ந்திருப்பதை அதிகம் விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்த குலாம் நபி ஆசாத்தின் மாநிலங்களவை எம்.பி.பதவிக் காலம் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி நிறைவு பெற்றது. அப்போது மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "எனது நெருங்கிய நண்பர் ஆசாத். அவருக்கான கதவு எப்போதும் திறந்திருக்கும்" என்று கூறியது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x