Published : 28 Feb 2021 03:08 PM
Last Updated : 28 Feb 2021 03:08 PM
60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனா தடுப்பூசி போடும் முகாம் நாளை (மார்ச்1) முதல் தொடங்குகிறது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நீரிழிவு நோய்கள், கடந்த ஓராண்டாக இதயக்கோளாறு நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் உள்ளிட்ட 20 இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் முடியும் தறுவாயில் இருப்பதையடுத்து, 2-வது கட்டமாக மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
கரோனா தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போடப்பட உள்ளது. இதில் அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசியை இலவசமாகப் போட்டுக் கொள்ளலாம். தனியார் மருத்துவமனையில் ரூ.250 செலுத்தி கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
கரோனா தடுப்பூசி போடும் 60 வயதுக்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். இணை நோய்கள் இருப்போர் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் ஒருவரிடம் தனக்கிருக்கும் இணை நோய்கள் குறித்த சான்றிதழ் பெற்றுவந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கிய சேது, கோ-வின் ஆகிய செயலிகளில் முன்பதிவு செய்துகொண்டும் மக்கள் கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.
இந்நிலையில் 20 இணை நோய்கள் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து கரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக நீரிழிவு நோய், கடந்த ஓராண்டுக்கும் மேலாக இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தோர், மிதமான மற்றும் தீவிரமான இதய நோய் இருப்போர், சிறுநீரக நோய் இருப்போர், 2 ஆண்டுகளாக தீவிரமான சுவாசம் தொடர்பான நோய்கள் இருப்போர் அதற்கான மருத்துவ சிகிச்சை பெற்றோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போர், ஹெச்ஐவி தொற்று உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த இணை நோய்கள் இருப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று, கோ-வின் 2.0, ஆரோக்கிய சேது செயலியில் பதிவேற்றம் செய்து, தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காகப் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT