Published : 27 Feb 2021 06:16 PM
Last Updated : 27 Feb 2021 06:16 PM
தடுப்பூசி வழங்குதல் அடுத்த கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் அலட்சியமாக இல்லாமல் இருத்தல், கடுமையான சமூக இடைவெளி நடவடிக்கைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தெலங்கானா, மகாராஷ்டிரா, சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகள் குறித்து மத்திய அமைச்சரவை செயலாளர் ஆய்வு செய்தார்.
கடந்த ஒரு வாரமாக அதிக கோவிட் பாதிப்புகளை கண்டு வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களான மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றின் தலைமை செயலாளர்களோடு நடைபெற்ற உயர்மட்ட ஆய்வு கூட்டத்திற்கு மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா தலைமை தாங்கினார்.
கோவிட் மேலாண்மை மற்றும் எதிர்வினை உத்திகளை ஆய்வு செய்வதற்காக காணொலி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், மத்திய சுகாதார செயலாளர், இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் தலைமை இயக்குநர், நிதி ஆயோக்கின் அதிகாரம் பெற்ற குழுவின் உறுப்பினர்கள் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இவற்றில் மகாராஷ்டிரா அதிக அளவிலான பாதிப்புகளை பதிவு செய்து வருகிறது.
நோய் பரவலை கட்டுப்படுத்த கடும் கண்காணிப்பை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சரவை செயலாளர், கடந்த வருடத்தின் கடுமையான கூட்டு உழைப்பால் ஏற்பட்ட நன்மைகளை தவற விடக்கூடாது என்றும் கூறினார்.
பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், கண்காணிப்பு மீது மீண்டும் கவனம் செலுத்துதல், குறிப்பிட்ட மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகளை செயல்படுத்துதல், பாதிப்புகளை விரைந்து கண்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்தல், புதிய வகை கரோனா தொற்று பரவலை கண்டறிதல், அதிக உயிரிழப்புகளை கண்டுவரும் மாவட்டங்களில் மருத்துவ மேலாண்மை மீது கவனம் செலுத்துதல், அதிக பாதிப்புகள் உள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் பரிசோதனைகளை செய்தல், சரியான நடத்தை விதிகளை பின்பற்றுவதில் மக்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்துதல், தடுப்பூசி வழங்குதல் அடுத்த கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் அலட்சியமாக இல்லாமல் இருத்தல், கடுமையான சமூக இடைவெளி நடவடிக்கைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT