Last Updated : 27 Feb, 2021 03:44 PM

6  

Published : 27 Feb 2021 03:44 PM
Last Updated : 27 Feb 2021 03:44 PM

அனைத்து மதங்களையும், மக்களையும், சாதிகளையும் காங்கிரஸ் சமமாக மதிக்கிறது: ராகுல் காந்திக்கு குலாம்நபி ஆசாத் பதில்

ஜம்முவில் நடந்துவரும் சாந்தி சம்மேளன் நிகழ்ச்சியில் குலாம் நபி ஆசாத் பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ

ஜம்மு

அனைத்து மதங்களையும், மக்களையும், சாதிகளையும் காங்கிரஸ் கட்சி சமமாக மதிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ராகுல் காந்திக்கு மறைமுகமாகப் பதில் அளித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மூன்று நாட்கள் தனது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீருக்குச் சென்றுள்ளார். குலாம் நபி ஆசாத்தின் குளோபல் காந்தி அறக்கட்டளை சார்பில் சாந்தி சம்மேளன் எனும் நிகழ்ச்சி ஜம்முவில் இன்று நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, கபில் சிபல், விவேக் தன்ஹா, மணிஷ் திவாரி, ராஜ்பப்பர், பூபேந்திரசிங் ஹூடா உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைமை தேவை, ஆக்கப்பூர்வமாகச் செயல்படும் தலைமை தேவை என்று கடிதம் எழுதிய 23 தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

சமீபத்தில் கேரளாவுக்குச் சென்றிருந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு எம்.பி.யான ராகுல் காந்தி, வடக்கு, தெற்கு எம்.பி. என்று பிரித்துப் பேசினார். அவர் பேசுகையில், " கடந்த 15 ஆண்டுகளாக நான் வடமாநிலத்தில் எம்.பி.யாக இருந்தேன். வித்தியாசமான அரசியலைப் பழகினேன். ஆனால், கேரளாவுக்கு வந்தபின், எனக்கு திடீரென புத்துணர்ச்சியாக இருக்கிறது.இங்குள்ள மக்கள் பிரச்சினைகள் மீது கவனம் செலுத்துகிறார்கள், அதைப்பற்றிப் பேசுகிறார்கள், தெளிவாக இருக்கிறார்கள்.

நான் அமெரிக்காவில் இருக்கும் சில மாணவர்களுடன் பேசினேன், நான் கேரளாவில் இருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் எனத் தெரிவித்தேன். இது வெறும் ஈர்ப்பு அல்ல, நீங்கள் அரசியல் செய்யும் வழி, உங்கள் அரசியலில் இருக்கும் புத்திசாலித்தனம். இது எனக்குக் கற்றுக்கொள்ளும் அனுபவமாக இருக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு ஏற்கெனவே ஆனந்த் சர்மா, கபில் சிபல் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்து, தனது பேச்சு குறித்து ராகுல் காந்தி விளக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சாந்தி சம்மேளனம் நிகழ்ச்சியில் பேசிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும், ராகுல் காந்திக்குப் பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீராக இருந்தாலும் அல்லது லடாக்காக இருந்தாலும் சரி. நாங்கள் அனைத்து மதங்களையும், மக்களையும், சாதிகளையும் மதிக்கிறோம். காங்கிரஸ் கட்சி அனைத்து சாதி, மதங்கள், மக்களையும் வேறுபாடின்றி மதிக்கிறது. அனைவரையும் சமமாக மதிக்கிறது. அதுதான் காங்கிரஸ் கட்சியின் பலம், இந்த நடைமுறை தொடரும்.

இங்கு முக்கியமான தலைவர்கள் பலர் வந்துள்ளார்கள். கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக, நண்பர்களாக நாங்கள், நாடாளுமன்றத்தைத் தவிர்த்து வேறு எங்கும் சந்தித்து பேசியதில்லை. அதிலும் நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரம், வேலையின்மை, மாநில அந்தஸ்தைப் பறித்தது, தொழில்துறை, கல்வித்துறையை முடக்கியது, ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது ஆகியவை பற்றித்தான் பேசியிருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே அதிருப்தி தலைவர்களில் ஒருவரும் மூத்த தலைவருமான ஒருவர் கூறுகையில் " நாங்கள் ஜம்முவில் ஒன்று சேர்ந்திருப்பது கட்சியின் வலிமையை வெளிப்படுத்த மட்டுமல்ல, ராகுல் காந்திக்கும் எங்கள் வலிமையைச் சொல்லத்தான் கூடியிருக்கிறோம். வடக்கிலிருந்து, தெற்கு வரை, இந்தியா என்பது ஒன்றுதான் என்று மக்களிடம் கூறுவோம்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x