Published : 30 Nov 2015 09:22 AM
Last Updated : 30 Nov 2015 09:22 AM
நாடு முழுவதும் ஜன் லோக் பால் சட்டம் அமல்படுத்த வலி யுறுத்தி டெல்லியில் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டம் நடத் தினார். இதில் தீவிரமாகப் பங் கேற்ற அர்விந்த் கேஜ்ரிவால், அதை மையமாக வைத்து ஆம் ஆத்மி எனும் அரசியல் கட்சியை தொடங்கினார். கடந்த 2013, டிசம்பரில் காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சியும் அமைத் தார். இதன் 49-வது நாளில் இந்த மசோதாவை தாக்கல் செய்ய முயன்றவருக்கு அது முடியாமல் போனதால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் டெல்லியில் 2015 சட்டப்பேரவை தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்த கேஜ்ரிவால், சுமார் 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.
முழுமையான மாநில அந்தஸ்து தரப்படாமல் ஒரு யூனியன் பிரதேச மாக டெல்லி இருப்பதால், அம் மாநிலத்தின் பல முக்கிய முடிவு கள் மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகே எடுக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில் தற்போது தாக்கல் செய்யப்படவுள்ள ஜன் லோக்பால் மசோதா டெல்லியின் துணைநிலை ஆளுநர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது.
டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால், அங்கு விவாதத்துக்கு பிறகு இந்த மசோதா எளிதாக நிறைவேறிவிடும். ஆனால் அந்த மசோதா துணைநிலை ஆளுநர் மற்றும் மத்திய உள்துறை அமைச் சகம் வழியாகத் தான் குடியரசுத் தலைவரின் இறுதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அப்போது, ஜன் லோக்பால் மசோதா மீண்டும் சிக்கலுக்கு உள்ளாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூறும்போது, “எங்கள் முக்கியக் குறிக்கோளான இந்த மசோதாவை மத்தியில் தலைமை வகிக்கும் பாஜக நிறைவேற்ற விடாது என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். இதை குடியரசுத் தலை வருக்கு அனுப்பாமல் அவர்கள் நிறுத்தி வைக்கும்போது பாஜக மீது பழிபோட எங்களுக்கு ஒரு காரணம் கிடைக்கும். இந்த அரசியல் செய்யத் தெரியாமல் தான் கடந்த முறை 49 நாளில் கேஜ்ரிவால் ராஜி னாமா செய்தார். இனி அதுபோன்ற தவறுகளை செய்யாமல் அரசியல் செய்ய புரிந்து கொண்டிருக்கிறார்” என்றனர்.
இந்த மசோதாவை தாக்கல் செய்ய வேண்டி, டெல்லி சட்டப் பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 4-ம் தேதி வரை நீட் டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த ஜன் லோக்பால் மசோதாவில் பல முக்கியக் குறைபாடுகள் சரிசெய்யப்படாமல் இருப்பதாக வும் கூறப்படுகிறது.
உதாரணமாக, கேஜ்ரிவாலால் தொடங்கப்பட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு, யாருடைய தலைமையின் கீழ் இயங்கும் என்பதில் மோதல் நிலவுகிறது. இது குறித்த ஒரு வழக்கும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் உள்ளது.
மேலும் மத்திய அரசின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதாகக் கருதப்படும் டெல்லி அரசின் உயரதிகாரிகளையும் ஜன் லோக்பாலின் கீழ் கேஜ்ரிவால் கொண்டு வந்துள்ளார். இந்த அதிகாரிகள் தங்கள் சொத்துப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31-ம் தேதி அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதுபோன்ற சில சர்ச்சைக்குரிய பிரிவுகளால் ஜன் லோக்பால் மசோதாவுக்கு சிக்கல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT