Last Updated : 26 Feb, 2021 02:37 PM

6  

Published : 26 Feb 2021 02:37 PM
Last Updated : 26 Feb 2021 02:37 PM

நகைச்சுவை உணர்வோடு இருங்கள்; உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்: சென்னை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி அறிவுரை

சென்னை எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழக பட்டளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசிய காட்சி: படம் | ஏஎன்ஐ.

சென்னை

நாட்டில் ஒட்டுமொத்த சுகாதாரத் துறையிலும், மருத்துவக் கல்வியிலும் மத்திய அரசு மாற்றம் செய்து வருகிறது. தேசிய மருத்துவ ஆணையம் மிகப்பெரிய வெளிப்படைத் தன்மை நிறைந்தது. மருத்துவர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். நகைச்சுவை உணர்வோடு இருங்கள் என்று சென்னை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

சென்னை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

''மாணவர்களுக்கும், அடுத்து மருத்துவர்களாகச் செல்வோருக்கும் எனது வாழ்த்துகள். சுயநலத்துக்கு அப்பாற்பட்டு, அச்சமில்லாமல் நீங்கள் பணியாற்ற வேண்டும். நாட்டில் ஒட்டுமொத்த மருத்துவக் கல்வியையும், சுகாதாரத் துறையிலும் மத்திய அரசு மாற்றம் செய்து வருகிறது. இதற்காகக் கொண்டுவரப்பட்ட தேசிய மருத்துவ ஆணையம் மிகப்பெரிய வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரும். புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதை ஒழுங்குபடுத்தும். இந்தத் துறையில் மனிதவளத்தின் தரத்தையும், எளிதாகக் கிடைக்கும் வகையில் மேம்படுத்தப்படும்.

கடந்த 6 ஆண்டுகளாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு, அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து 50 சதவீத இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

முதுகலை மருத்துவப் படிப்புக்கான இடங்களும் 24 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து முதுகலை மருத்துவப் படிப்புக்கு 80 சதவீத இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. நாட்டில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளில் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகளாக உயர்த்தியுள்ளோம்.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்கவும் அனுமதி தரப்பட்டுள்ளது.
இந்த ஒவ்வொரு கல்லூரிக்கும் மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடிக்கு அதிகமான நிதியுதவி அளிக்கும்.

இந்த நாட்டில் மருத்துவப் பணியும், மருத்துவர்களும் மிகுந்த அளவில் மதிக்கப்படுகிறார்கள். அதிலும் கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின் மருத்துவர்கள் மீது கூடுதல் மரியாதை வந்துள்ளது.

உங்கள் மருத்துவத் தொழிலின் தன்மையை மக்கள் அறிந்து மதிப்பளிக்கிறார்கள். ஒருவர் உயிர் வாழ்வதும், உயிரிழப்பதும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. ஆதலால், மருத்துவர்கள் நோயாளிகளுடன் உரையாடும்போது நகைச்சுவை உணர்வோடு இருந்து, அவர்களை உற்சாகப்படுத்தி, நம்பிக்கையை வளர்க்க வேண்டும்.

நகைச்சுவை உணர்வு என்பது நோயிலிருந்து எளிதாக நோயாளிகளை மீட்டுக் கொண்டுவரும். அதுமட்டுமல்லாமல் அழுத்தமான சூழல், பணியிலிருந்து மருத்துவர்களும் தங்களின் மனதையும், உடலையும் உற்சாகப்படுத்த உதவும்.

மருத்துவர்கள் தங்கள் உடல்நிலை மீதும் அதிகமான அக்கறை கொள்ள வேண்டும். யோகா, தியானம், காலை நேர ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டு உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும்.

பட்டம் பெறுவோரில் 70 சதவீதம் பேர் பெண்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்தத் துறையிலும் பெண்கள் முன்னெடுத்து வழிநடத்திச் செல்வது சிறப்பாகவும், பெருமைக்குரிய தருணமாகவும் இருக்கும்.

இந்தப் பல்கலைக்கழகம் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டது. ஏழை மக்கள் மீது அதிகமான கருணை உடையவராக எம்ஜிஆர் இருந்தார்.

நான் சில ஆண்டுகளுக்கு முன் எம்ஜிஆர் பிறந்த இலங்கைக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள தமிழ்ச் சகோதர, சகோதரிகளுடன் இணைந்து பணியாற்றுவது இந்தியாவுக்குப் பெருமைக்குரியதாகும். அங்குள்ள மக்களுக்காக அவசர ஊர்தி சேவை, மருத்துவமனை போன்றவற்றை உருவாக்கினோம்.

கரோனா பாதிப்பில் உலகிலேயே மிகவும் குறைந்த உயிரிழப்பு உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களும் அதிகரித்துள்ளனர். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகள் நமது மக்களுக்கு மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x