Published : 26 Feb 2021 08:41 AM
Last Updated : 26 Feb 2021 08:41 AM
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்தக் காரில் ஜெலட்டின் குச்சிகள் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பெட்டார் பகுதியில் அமைந்துள்ளது முகேஷ் அம்பானியின் பிரம்மாண்ட இல்லம். அண்டிலா ஹவுஸ் என்றழைக்கப்படும் இந்த இல்லம் உலகளவில் அறியப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை முகேஷ் அம்பானியின் அண்டிலா ஹவுஸ் முன்னாள் வெடிப்பொருள் நிரப்பப்பட்ட சொகுசு கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மும்பை காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில், "மும்பை கார்மிச்சேல் சாலையில், கம்தேவி காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் முகேஷ் அம்பானியின் வீட்டின் முன் சந்தேகத்து இடமாக சொகுசு கார் ஒன்று நின்றிருந்தது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக காவல்துறை குழு அப்பகுதிக்கு விரைந்தது. காரை சோதனையிட்டபோது உள்ளே ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. ஆனால் அவற்றை வெடிக்கச் செய்யக்கூடிய டெட்டனேட்டர்கள் அதில் இணைக்கப்படவில்லை. இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெறுகிறது" எனத் தெரிவித்துள்ளது.
சிசிடிவி ஆதாரம்:
அம்பானி வீட்டின் முன் சந்தேகத்துக்கு இடமான வகையில் சொகுசு வாகனம் நிற்கும் தகவல் அறிந்ததுமே அங்கே காவல்துறையுடன் வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் குழுவும், பயங்கரவாத தடுப்புக் குழுவினரும் சென்றனர். அந்தக் காரில் ஜெலட்டின் குச்சிகள் மட்டுமே இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை அப்புறப்படுத்தினர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, சிசிடிவி காட்சிகள் ஆராய்ந்தபோது, மர்ம நபர் ஒருவர் ஸ்கார்பியோ எஸ்யுவி வாகனத்தில் வருவதும். அந்தக் காரை நிறுத்திவிட்டு இனோவா காரில் ஏறிச் செல்வதும் பதிவாகியுள்ளது. அந்த மர்ம நபர் நிறுத்திச் சென்ற காரிலேயே வெடிப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அந்தக் காரின் நம்பர் ப்ளேட் அம்பானி வீட்டின் பாதுகாப்பு வாகனங்களுக்கான பிரத்யேக எண்ணைக் கொண்டிருந்தது.
விசாரணையில் அது போலி நம்பர் ப்ளேட் என்பதும் தெரியவந்துள்ளது. காருக்கும் இருந்து ஒரு மிரட்டல் கடிதமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கடிதம் பற்றிய விவரத்தை காவல்துறையினர் வெளியிடவில்லை.
முகேஷ் அம்பானியின் வீட்டருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT